ஜொமாட்டோ நிறுவனம் தனது டெலிவரி பார்ட்னர்களுக்காக ரெஸ்ட் பாயிண்ட் எனும் புதிய வசதியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. ”தி ஷெல்டர் ப்ராஜெக்ட்” என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியால் அமைக்கப்பட உள்ள ஓய்வு மையங்களில்,  டெலிவரி பார்ட்னர்களுக்கு சுத்தமான குடிநீர், போன் சார்ஜ் செய்யும் நிலையங்கள், 24 மணி நேரமும் இயங்கும் ஹெல்ப் டெஸ்க், கழிவறைகள் மற்றும் முதலுதவி உள்ளிட்ட பல்வேறு அணுகl வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜொமாட்டோ நிறுவனம் விளக்கம்:


டெலிவரி பார்ட்னர்களை பாதுகாப்பாக வைத்திருப்பதோடு, அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஜொமாட்டோ நிறுவனம் விளக்கமளித்துள்ளது. குர்கானில் ஏற்கனவே இரண்டு ரெஸ்ட் பாயிண்ட்களை அமைத்துள்ள ஜொமட்டோ நிறுவனம், வெவ்வேறு பிரிவுகளை சேர்ந்த தங்களது டெலிவரி பார்ட்னர்களுக்கும் உதவும் வகையில் புதிய ரெஸ்ட் பாயிண்ட்களை அமைக்க திட்டமிட்டுள்ளது.


ஜொமாட்டோ நிறுவனரின் கருத்து:


இதுதொடர்பாக பேசியுள்ள ஜொமாட்டோ நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான தீபிந்தர் கோயல், ”எங்கள் டெலிவரி பார்ட்னர்களின் வேலை கடினமானதாக உள்ளது. அவர்கள் தங்களது பணிகளை சிறப்பாகச் செய்ய உதவும் பொது உட்கட்டமைப்பு இன்னும் எங்களிடம் இல்லை. டெலிவரி பார்ட்னர்கள் பணியில் இருக்கும் போது, ​​போக்குவரத்து நெரிசலில் செல்வது முதல் மோசமான வானிலையில் ஆர்டர்களை வழங்குவது வரை பல சவால்களை எதிர்கொள்கின்றனர்.


இதன் காரணமாக, எங்கள் அனைத்து டெலிவரி பார்ட்னர்களுக்கும் (Zypp போன்ற நிறுவனங்கள் உட்பட) ஒருங்கிணைந்த ரெஸ்ட் பாயிண்ட்களை அமைக்க உள்ளோம்” என தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஜொமாட்டோ நிறுவன ஊழியர்கள் தினசரி எதிர்கொள்ளும் பல பிரச்னைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாகவே உணவு டெலிவரி ஊழியர்கள் அமர இடமின்றி திறந்த வெளியில் ஆங்காங்கே அமர்ந்து இருப்பதையும், கழிவறை போன்ற அடிப்படை தேவைகளுக்காக தவிப்பது போன்றவற்றை நம்மால் காண முடிகிறது. இந்த மோசமான சூழலை தவிர்க்கும் பொருட்டு, ஜொமாட்டோ நிறுவனம் ரெஸ்ட் பாயிண்ட் வசதிகளை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.


முன்னோடி நிறுவனம்:


ஊழியர் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது, ஜொமாட்டோ நிறுவனத்திற்கு ஒன்றும் புதியது அல்ல. கடந்த 2021ம் ஆண்டு பெண் டெலிவெரி பார்ட்னர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்த அந்நிறுவனம், பெண்களுக்கு தற்காப்புப் பயிற்சி, முதலுதவி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு கருவிகளுக்கான அணுகலை அளித்தது.


தங்களுடன் கூட்டணி வைத்துள்ள அனைத்து ஓட்டல்களிடம், பெண் டெலிவரி ஓட்டுனர்களுக்குத் தனியான கழிவறைகள் உள்ளிட்டவற்றை வழங்க அறிவுறுத்தியுள்ளது. கார்பன் உமிழ்வை குறைக்கும் நோக்கில், இனி பிளாஸ்டிக் பயன்பாடு கிடையாது என்ற அறிவிப்பை கடந்த 2021ம் ஆண்டு ஜொமாட்டோ நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் அந்த ஆண்டில் 5 லட்சம் மெட்ரிக் டன் கார்பன் உமிழ்வுக்கு நிகரான, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. முன்னதாக, 2019ம் ஆண்டில் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு, அவர்களுக்கு ஏற்றவாறான வாகனங்களையும் ஜொமாட்டோ நிறுவனம் வழங்கியது.