உத்தரப்பிரதேசத்தில் தம்பதி ஒன்று தாங்கள் செல்லமாக வளர்க்கும் ஆட்டுக்குட்டிகளுக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் நடந்துள்ளது. உ.பி. மாநிலம் பாந்தா மாவட்டத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.


இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இது குறித்து ஆட்டுக்குட்டிகளை வளர்க்கும் நபர், எனது ஆட்டுக்குட்டி ஒரே நேரத்தில் பல குட்டிகளை ஈன்றுள்ளது. அதனைக் கொண்டாடும் வகையில் நான் கேக் வெட்டினேன். என் உறவினர்கள் நண்பர்களை அழைத்து பார்ட்டி கொண்டாடினோம். பார்ட்டிக்கு நாங்கள் டிஜே வைத்திருந்தோம் என்றார்.






இந்தத் தம்பதி கன்சிராம் காலணியில் வசிக்கின்றனர். ஆட்டுக்குட்டிக்கு விழா எடுத்ததால் அன்றைய தினம் கன்சிராம் காலனியே விழாக்கோலம் பூண்டது.


செல்லப்பிராணிகளும் சேர்ந்தது தான் குடும்பம்..


செல்லப்பிராணிகளை சிலர் தங்கள் வீட்டில் ஒருவராகவே வளர்ப்பது உண்டு. எல்லா நிகழ்ச்சிகளுக்கும் ஆடை. பிறந்தநாள் கொண்டாட்டம் என எல்லாம் களைகட்டும். அதற்கும் ஒருபடி மேலே சென்று செல்லமாக வளர்த்த நாய்க்குட்டிக்கு வளைகாப்பு செய்த சம்பவம் கூட உண்டு. அப்படியான சம்பவம் அண்மையில் தமிழகத்தின் மயிலாடுதுறையில் நடந்தது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி மதீனா நகரை சேர்ந்த தம்பதியரின் மகன்களான நிதீஷ்குமார் மற்றும் சிவராஜ் தங்களது உறவினர் வீட்டிலிருந்து நாய் ஒன்றை வாங்கி வந்து வளர்த்து வந்தனர்.




 


அந்த நாய் மீது குடும்பத்தில் உள்ள அனைவரும் அதிக அன்பு செலுத்தினர். அந்த நாயும் வீட்டில் உள்ள அனைவர் மீதும் அதிக பாசம் காட்டியது. அந்த நாய் கருவுற்றதால் அதற்கு வளைகாப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி அருகில் வசிப்பவர்களை தங்கள் வீட்டிற்கு அழைத்து அந்த நாய்க்கு வளைகாப்பு நடத்தினர்.  வழக்கமாக வளைகாப்பு எப்படி நடத்தப்படுமோ அதேபோல பூ, பழங்கள், இனிப்பு, வளையல்கள் வைத்து இந்த வினோத சம்பவம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் அந்த நாய்க்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் வைத்து ஆசிர்வதித்தனர். 


இந்த உலகம் எல்லோரும் சேர்ந்ததுதான். எல்லோருக்குமானது தான். அன்பு சூழ் உலகு அழகானதாக அமைதியானதாக இருக்கும் என்பதற்கு இது போன்ற சம்பவங்களும் இதனை செய்யும் எளிமையான மனிதர்களும் தான் சாட்சி.