உத்தர பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


உத்தரபிரதேசம் மாநிலம் பதாவ் மாவட்டத்தை அடுத்த உரைனா கிராமத்தை வசித்து வந்தவர் 22 வயதான ஆஷா. இவரும் அதே கிராமத்தை சேர்ந்த 24 வயதான கோவிந்த் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலித்து வந்தது இருவரது வீட்டுக்கும் தெரியவர இரு வீட்டிலும் ரணகளமானது. 


காதலித்த இருவருக்கும் வேறு வழியில்லாததால் கடந்த 2017 ம் ஆண்டு இவர்கள் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து, எங்கே தங்கள் இருவரையும் பிரித்துவிடுவார்களோ என்ற பயத்தில் டெல்லிக்கு சென்று தனியாக வீடு எடுத்து சந்தோஷமாக தங்களது வாழ்க்கையை தொடங்கியுள்ளனர். 


இந்தநிலையில் அவர்கள் டெல்லி வந்த சில வாரங்களிலேயே ஆஷாவின் தந்தை கிஷன் பால் டெல்லி சென்று இருவரையும் அன்பான வார்த்தைகளால் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். தம்பதிகளும் அவரது வார்த்தைகளை நம்பி அவருடன் சென்றுள்ளனர்.


ஊர் திரும்பிய கோவிந்தை, கிஷன் பால் கோடாரியால் தாக்கிக் கொன்றார். கோவிந்த்தை காப்பாற்றச் சென்ற ஆஷாவை, கிஷன்பால் குடும்பத்தினர் தாக்கிக் கொன்றனர். கடந்த, 2017ல் நடந்த இச்சம்பவம் குறித்து பப்பு சிங் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 


கிஷன்பாலின் மனைவி ஜல்தாரா, அவர்களது மகன்கள் விஜய் பால் மற்றும் ராம் வேல் ஆகியோரும் கொலைக்கு உடந்தையாக இருந்துள்ளனர். இதுகுறித்து கோவிந்தின் தந்தை பப்பு சிங் போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் நால்வரும் கைது செய்யப்பட்டனர்.


இந்த வழக்கு கடந்த 4 ஆண்டுக்கு மேலாக நிலுவையில் இருந்து வந்தநிலையில் மாவட்ட நீதிமன்ற நீதிபதி பங்கஜ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து வாதங்களை கேட்டு நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.