நாட்டில் சமீபகாலமாக தெருநாய்களால் கடி வாங்குபவர்களும், அதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அப்படி ஒரு கொடூர சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது. உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ளது கண்ணாவ்ஜ் மாவட்டம். இந்த மாவட்டத்தில் வசித்து வருபவர் ஓம்கார். இவருக்கு திருமணமாகி பிங்கி என்ற மனைவியும், பிரின்ஸ் (வயது 12) என்ற மகனும் உள்ளனர்.
தந்தைக்கு பயந்து ஓடிய மகன்:
ஓம்கார் கஞ்சா போதை பழக்கத்திற்கு அடிமையாக இருந்து வந்துள்ளார். இவர் போதையில் தினமும் வீட்டிற்கு வருவதுடன் தனது மனைவி மற்றும் மகனையும் அடித்து உதைத்து கொடுமைப்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த செவ்வாய்கிழமை வழக்கம்போல போதையில் வீட்டிற்கு வந்த இவர் தனது மனைவி மற்றும் மகன் பிரின்சை சரமாரியாக அடித்துள்ளார். தந்தை தொடர்ந்து இதேபோன்று அடித்து வந்ததால் மகன் பிரின்ஸ் தந்தையின் அடிக்கு பயந்து வீட்டை விட்டு யாருக்கும் தெரியாமல் வெளியேறியுள்ளான்.
ஆனால், மாலை நீண்ட நேரமாகியும் மகன் வீட்டிற்கு வராததால் அவரது தாய் பிங்கி பதறியுள்ளார். அக்கம்பக்கத்தினர் வீடுகளிலும், மற்ற பகுதிகளிலும் மகன் பிரின்சை பிங்கி தேடியுள்ளார். ஆனாலும், மகனை காணததால் பிங்கி மிகவும் பதற்றம் அடைந்துள்ளார். அப்போது, அவர்களது வீட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாக்ரண்டநகர் அருகே ஒரு சிறுவனின் உடல் கிடப்பதாக தகவல் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
நாய்கள் கடித்து உயிரிழப்பு:
அப்போது, மகனை காணவில்லை என்று பிங்கி தேடுவதை அறிந்த போலீசார் அவரை சம்பவ இடத்திற்கு வரச் சொல்லியுள்ளனர். அப்போது, அங்கே வந்த பிங்கி உயிரிழந்த சடலம் தன்னுடைய மகன் பிரின்ஸ் என்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், தந்தை அடித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன் பிரின்சை, தெருநாய்கள் துரத்தி கடித்துள்ளன. தெருநாய்கள் ஒன்றாக சேர்ந்து கடுமையாக கடித்து குதறியதால் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
போலீசார் உயிரிழந்த சிறுவன் பிரின்ஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். சிறுவன் பிரின்ஸ் நாய் கடித்து உடல் எங்கும் காயம் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தெருநாய்களின் இந்த வெறிச்செயல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க: CM Stalin Delhi Visit : டெல்லி சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...உற்சாக வரவேற்பு தந்த திமுக நிர்வாகிகள்...!
மேலும் படிக்க: India Corona Spike: இந்தியாவில் மெல்ல மெல்ல குறையும் கொரோனா.. 7,533 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு.. இன்றைய நிலவரம் இதோ..