CM Stalin Delhi Visit : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி சென்றடைந்தார்.


டெல்லியில் முதல்வர் ஸ்டாலின்


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 10.30 மணிக்கு டெல்லி புறப்பட இருந்த நிலையில், திடீரென அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டது. 


இந்நிலையில், இன்று காலையே சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார். டெல்லிக்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லி விமான நிலையத்தில், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், எஸ்.ஜெகத்ரட்சகன், கே. ஆர். என்.ராஜேஷ்குமார், திரு.எம்.எம்.அப்துல்லா, டி. எம். கதிர் ஆனந்த், சா. ஞானதிரவியம் ஆகியோர் பொன்னாடை அணிவித்து முதலமைச்சர் ஸ்டாலினை வரவேற்றனர்.


குடியரசுத் தலைவருடன் சந்திப்பு:


டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை இன்று காலை 11.30 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்கிறார். கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க அழைப்பு விடுப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். கிண்டியில் ரூ. 230 கோடியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு மருத்துவமனை ஜூன் 3 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. 


கருணாநிதி நூற்றாண்டு விழா:


இந்த புதிய பன்னோக்கு மருத்துவமனை சுமார் 51 ஆயிரத்து 429 சதுர கி.மீ. பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. தரைத்தளம் மற்றும் 6 மாடிகளுடன் இந்த புதிய மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் மக்கள் பலன் பெறும் வகையில் இதயம், சிறுநீரகம், மூளை நரம்பியல், ரத்தநாளங்கள், குடல் – இரைப்பை, புற்றுநோய் ஆகிய பிரிவுகளுக்கு அறுவை சிகிச்சை துறைகள் செயல்பட உள்ளது.


தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான மறைந்த கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ந் தேதி இந்த கட்டிடம் திறக்கப்பட உள்ளது. கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு முதலமைச்சர் இந்த பன்னோக்கு மருத்துவமனை திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


சோனியாவுடன் சந்திப்பா?


குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மட்டுமின்றி காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி மற்றும் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களையும் மு.க.ஸ்டாலின் சந்திப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு நிறைவு பெற்ற பிறகு இன்று இரவே அவர் சென்னை திரும்ப உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சி தலைவர்களுடனான சந்திப்பின்போது அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 




மேலும் படிக்க


Karnataka election: கர்நாடகத் தேர்தலில் கலக்கல் அறிவிப்புகள் வெளியிட்ட காங்கிரஸ்! வாக்குறுதிகளில் பிரதிபலிக்கும் திமுக!