உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது. ஜனநாயக கடமையாற்ற இந்தியர்கள் தயாராகி வருகின்றனர். இந்த தேர்தலில் வாக்களிக்க கிட்டத்தட்ட 97 கோடி இந்தியர்கள் தகுதி பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கையானது அமெரிக்கா, இந்தோனேசியா, பாகிஸ்தான் நாடுகளின் மொத்த மக்கள் தொகையை விட அதிகம்.


நீண்ட நெடிய வரலாற்றை கொண்ட இந்திய ஜனநாயகம்:


இவ்வளவு பெரிய எண்ணிக்கையை வாக்களிக்க செய்வது என்பது எளிதான காரியம் அல்ல. தொழில்நுட்பம் உச்சம் தொட்ட இந்த காலத்திலேயே இப்படி என்றால் சுதந்திரம் பெற்ற தருணத்தில் இந்தியாவின் நிலை எப்படி இருந்திருக்கும் என யோசித்து பாருங்கள்?


தொழில்நுட்பம் வளர்ச்சி இல்லாத, படிப்பறிவு இல்லாத மக்கள் பெரும்பான்மையாக உள்ள நாட்டில் எவ்வளவு சவால்கள் இருந்திருக்கும். ஆனால், அதை எல்லாம் தாண்டி, நமது அரசியலமைப்பை உருவாக்கிய அம்பேத்கரும், அவருக்கு உறுதுணை இருந்த நேருவும் இந்தியாவில் ஜனநாயகம் செழித்தோங்க முக்கிய பங்காற்றினர். 


ஆனால், இந்தியாவை பொறுத்தவரையில் மக்களாட்சிக்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. குறிப்பாக, பல விஷயங்களில் இந்தியாவுக்கே முன்னுதாரணமாக திகழும் தமிழர்கள், ஜனநாயக வரலாற்றிலும் எடுத்துக்காட்டாக வாழ்ந்துள்ளனர்.


உத்திரமேரூர் கல்வெட்டுகள் தரும் ஆச்சரியங்கள்:


1000 ஆண்டுகளுக்கு முன்பே, ஜனநாயக நெறிமுறைகளை தமிழர்கள் பின்பற்றி வந்துள்ளது உத்திரமேரூர் கல்வெட்டுகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 30 உறுப்பினர்கள் கொண்ட 'சபை' மூலம் கிராமத்தை ஆட்சி புரிந்து வந்துள்ளனர். தேர்தலுக்கு என முறையான அமைப்பை கொண்டு தங்கள் பிரதிநிதிகளை அவர்களே தேர்வு செய்துள்ளனர். இதில், சிறப்பு என்னவென்றால் அனைத்துமே ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.


சென்னைக்கு தெற்கே அமைந்துள்ள உத்திரமேரூரில் பல கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கிபி 920 நூற்றாண்டு பராந்தக சோழனின் ஆட்சி காலத்தை சேர்ந்த இந்த கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ள தகவல்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.


தகுதி பெற்ற வேட்பாளர்களின் பெயர்களை சேகரித்து வைக்க தமிழர்கள் பானையை பயன்படுத்தியிருப்பது கல்வெட்டு மூலம் தெரிய வந்துள்ளது. உத்திரமேரூர் ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோயிலில் உள்ள கல்வெட்டுகள் இந்த வரலாற்றை நமக்கு எடுத்துரைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.


பழங்காலத்தில் தமிழர்கள் கடைபிடித்த 'மக்களாட்சி'


உத்திரமேரூர் கல்வெட்டுகள் குறித்து பிரதமர் மோடியே மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசியிருந்தார். கிபி 750 நூற்றாண்டில் பல்லவ மன்னன் நந்திவர்மன்தான் உத்திரமேரூர் கிராமத்தை முதன்முதலில் உருவாக்கியதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.


மக்களாட்சியாக சொல்லப்பட்டாலும் அந்த காலக்கட்டத்தில் அனைவராலும் சபை உறுப்பினராகி விட முடியாது. சபை உறுப்பினராக சில தகுதிகள் கடைபிடிக்கப்பட்டிருக்கின்றன. அவரின் வயது 35 முதல் 70க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட நிலத்தை வைத்திருக்க வேண்டும். சொந்த நிலத்தில் வீடு வைத்திருக்க வேண்டும் என பல நிபந்தனைகள் இருந்திருக்கின்றன.