உக்ரைனில் போருக்கான நேரம் இதுவல்ல என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதினிடம் பிரதமர் நரேந்திர மோடி கூறியதற்கு அமெரிக்காவின் முக்கிய ஊடகங்கள் இன்று பாராட்டு தெரிவித்துள்ளன.


 






உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் நரேந்திர மோடி - விளாடிமிர் புதின் மேற்கொண்ட இரு தரப்பு பேச்சுவார்த்தை பற்றி அமெரிக்காவின் பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இந்திய பிரதமர் மோடி உக்ரைன் போர் தொடர்பாக புதினை கண்டித்ததாக புகழ்பெற்ற வாஷிங்டன் போஸ்ட் இன்று தலைப்பு செய்தி வெளியிட்டுள்ளது. அதில், "அதிர்ச்சியூட்டும் வகையில், ஊடகத்தின் முன்பு கண்டித்த மோடி, 'இன்றைய நேரம் போருக்கானது அல்ல. இதைப் பற்றி நான் உங்களுடன் தொலைபேசியில் பேசினேன் என புதினிடம் கூறியதாக அமெரிக்க நாளிதழ் வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.


"69 வயதான ரஷியாவின் வலிமைமிக்க தலைவரான புதின் அனைத்து தரப்பிலிருந்தும் அசாதாரண அழுத்தத்தின் கீழ் வருவதை இந்த அரிய விமர்சனம் எடுத்துரைக்கிறது" என செய்தி வெளியாகியுள்ளது.


போர் தொடர்பாக பிரதமர் மோடிக்கு பதிலளித்த ரஷிய அதிபர் புதின், "உக்ரைன் போர் சம்மந்தமாக நீங்கள் தொடர்ந்து வெளிப்படுத்தும் உங்கள் நிலைப்பாடு எனக்குத் தெரியும். இதை விரைவில் நிறுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். துரதிர்ஷ்டவசமாக, எதிர் தரப்பான உக்ரேன் மட்டுமே, பேச்சுவார்த்தையை நிராகரித்துள்ளது.


 






'போர்க்களத்தில்' இராணுவ வழிகளில் இலக்குகளை அடைய விரும்புவதாக உக்ரைன் அறிவித்தது. ஆயினும்கூட, அங்கு என்ன நடக்கிறது என்பதை நாங்கள் எப்போதும் உங்களுக்குத் தெரியப்படுத்துவோம்" என்றார்.


தி வாஷிங்டன் போஸ்ட் மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் இரண்டின் இணையபக்கத்திலும் இது முதன்மை செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது. "இந்திய தலைவர் புதினிடம் இப்போது போருக்கான நேரம் இல்லை எனக் கூறியதாக தி நியூயார்க் டைம்ஸ் தலைப்பு செய்தியாக வெளியிட்டுள்ளது. 


"இந்தச் சந்திப்பின் தொனி நட்பாகவே இருந்தது. இரு தலைவர்களும் தங்களின் நீண்ட பகிரப்பட்ட வரலாற்றைக் குறிப்பிட்டனர். மோடி தனது கருத்துகளைத் தெரிவிப்பதற்கு முன்பே, உக்ரைன் போர் குறித்த இந்தியாவின் கவலையைப் புரிந்துகொண்டதாக புதின் கூறியதாக தி நியூயார்க் டைம்ஸ் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.