மத்தியப் பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் கூலி வேலை செய்துவரும் பழங்குடியினத் தொழிலாளி மீது பாஜக நிர்வாகி பிரவேஷ் சுக்லா சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தன்னுடைய கவனத்துக்கு வந்துள்ளதாகவும் 
குற்றவாளியைக் கைது செய்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளதாக மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் ட்விட்டரில் தெரிவித்தார்.


பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழித்த விவகாரம்:


இதனை தொடர்ந்து, பாஜக நிர்வாகி பிரவேஷ் சுக்லா புதன்கிழமை கைதுசெய்யப்பட்டார். மேலும், அனுமதி பெறாமல் கட்டப்பட்டதாக பிரவேஷ் சுக்லாவின் வீடும் இடிக்கப்பட்டது. பின்னர், போபாலில் மரம் நடும் நிகழ்ச்சிக்கு பாதிக்கப்பட்ட பழங்குடி தொழிலாளியை முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் அழைத்திருந்தார். 


அங்கு பாதிக்கப்பட்டவரின் காலைக் கழுவி அவரிடம் மன்னிப்புக் கோரினார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், குற்றவாளி பிரவேஷ் சுக்லா, தன்னுடைய தவறை உணர்ந்துள்ளதால் அவரை விடுதலை செய்யுமாறு மாநில அரசுக்கு பாதிக்கப்பட்ட பழங்குடி இளைஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.


குற்றவாளியை விடுவிக்க கோரும் பழங்குடி இளைஞர்:


இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அரசாங்கத்திற்கு எனது கோரிக்கை என்னவென்றால் (குற்றம் சாட்டப்பட்டவர்களால்) தவறு நடந்துள்ளது. இப்போது பிரவேஷ் சுக்லாவை விடுவிக்க வேண்டும். கடந்த காலத்தில் என்ன நடந்திருந்தாலும், அவர் தனது தவறை உணர்ந்துள்ளார். 


பிரவேஷ் சுக்லா, மோசமாக நடந்து கொண்ட பிறகும், நீங்கள் இந்த கோரிக்கையை முன்வைக்கிறீர்களே என செய்தியாளர் கேட்டதற்கு, "ஆம், ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அவர் எங்கள் கிராமத்தின் பண்டிட். எனவே, அவரை விடுவிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கிறேன். கிராமத்தில் சாலை அமைப்பதைத் தவிர, அரசிடம் நான் கோருவதற்கு வேறு எதுவும் இல்லை" என பதில் அளித்தார்.


மத்திய பிரதேசத்தில் இந்தாண்டின் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட பழங்குடி இளைஞரின் கால்களை முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் கழுவியது டிராமா என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.


பாதிக்கப்பட்ட பழங்குடி இளைஞருக்கு 5 லட்சம் ரூபாயை நிதியுதவியாக மாநில அரசு அளித்தது. வீட்டைக் கட்டி கொள்வதற்காக கூடுதலாக 1.5 லட்சம் ரூபாய் வழங்கியது. வெள்ளிக்கிழமையன்று பிராமண அமைப்பு ஒன்று, சுக்லா வீட்டின் ஒரு பகுதியை இடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது. அவரது செயல் வருந்தத்தக்கது. ஆனால். அவரது நடத்தைக்காக அவரது குடும்ப உறுப்பினர்களை தண்டிக்க முடியாது என்று கூறியது.