குஜராத் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் நபர் ஒருவர், பாகிஸ்தான் நாட்டின் பெண் உளவுத்துறை அதிகாரியிடம் ரகசிய தகவல்களை பகிர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து, புஜ் நகரத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காதல் நாடகமாடி மயக்கிய பாகிஸ்தான் உளவுத்துறை ஏஜென்ட்:
குற்றம்சாட்டப்பட்ட நிலேஷ் பாலியா 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக புஜ் நகரில் உள்ள எல்லை பாதுகாப்பு படை தலைமையகத்தில் உள்ள மத்திய பொதுப்பணித் துறையின் மின் துறை அலுவலகத்தில் பியூனாக பணியாற்றி வருகிறார். இவரை நேற்று கைது செய்த மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு (ஏடிஎஸ்), நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் வைக்க அனுமதி கோர உள்ளது.
என்ன நடந்தது என்பதை விரிவாக விவரித்துள்ள மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவின் காவல் கண்காணிப்பாளர் சுனில் ஜோஷி, "இந்தாண்டு ஜனவரி மாதம், பாகிஸ்தான் உளவுதுறை பெண் அதிகாரியை நிலேஷ் பாலியா தொடர்பு கொண்டுள்ளார். கட்டப்பட்டு வரும் எல்லை பாதுகாப்பு படை கட்டிடங்களில் மின்மயமாக்கல் பணிகள் தொடர்பான பல முக்கிய ஆவணங்கள், சிவில் துறைகள் தொடர்பான சில ஆவணங்களையும் அவருடன் பாலியா பகிர்ந்து கொண்டார்.
அந்த பெண் அதிகாரி, பாலியாவை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டார். ஆசை வார்த்தைகளை கூறி, அவரை மயக்கி பணத்திற்காக ரகசிய தகவல்களை பகிர வைத்துள்ளார். தன்னை 'அதிதி திவாரி' என்று அறிமுகம் செய்து கொண்டு, தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதாக பாலியாவிடம் கூறியுள்ளார்.
ரகசிய தகவல்களை பகிர்ந்தது எப்படி?
இந்த தகவல்கள், தன்னுடைய வேலைக்கு தேவைப்படுவதாகக் கூறியுள்ளார். அதற்காக பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். காதல் செய்வது போல நாடகமாடி அவரிடம் இருந்து ரகசிய தகவல்களை பெற்றுள்ளார். தகவல்களை அளித்ததற்காக பணமும் பெற்றுள்ளார்.
இணைய பரிவர்த்தனைகள் மூலம் அவருக்கு மொத்தம் 28,800 ரூபாய் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு, அவரது தொலைபேசி மற்றும் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்து, அவர் வேறு யாருடன் தொடர்பு கொண்டிருந்தார் என்பதை விசாரிக்க உள்ளது.
அவரது செயல்பாடுகள் பற்றிய தகவல்களை பெற்ற பிறகு, பயங்கரவாத தடுப்பு பிரிவு அவரைக் கண்காணிக்க தொடங்கியுள்ளது. அவரை விசாரணைக்கு அழைப்பதற்கு முன்பு அவரது தொலைபேசி பதிவுகள் மற்றும் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்துள்ளது. ரகசிய காப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 121-ஏ, 123, 120-B உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.