Shocking Video: மத்திய பிரதேசத்தில் ஓடும் காரில் இளைஞர் ஒருவரை கொடூரமாக அடித்து, கால்களை நக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தொடரும் கொடூரங்கள்


சமூக கட்டமைப்பு ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் இன்னமும் ஒடுக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. இதனால் அவ்வப்போது நடைபெறும் சாதிய கொடுமைகள் தொடர்பான சம்பவங்கள் மனதை உலுக்கும் விதமாக அமைகின்றன.  சமீபத்தில் கூட மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடியின இளைஞர் மீது பாஜக பிரமுகர் ஒருவர் சிறுநீர் கழித்தது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


இதனை அடுத்து, முகத்தில் சிறுநீர் கழிக்கப்பட்டு வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞரின் கால்களை கழுவி, மாலை அணிவித்து மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் மரியாதை செலுத்தினார்.  இந்த சம்பவம் அடங்குவதற்குள் தற்போது மேலும் ஒரு கொடுமை அம்மாநிலத்தில் நடந்துள்ளது. ஓடும் காரில் இளைஞர் ஒருவரை கொடூரமாக அடித்து, கால்களை நக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கால்களை நக்க வைத்த கொடூரம்


அதன்படி, மத்திய பிரதேச  மாநிலம் குவாலியர் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதாவது, காரில் மூன்று பேர் சென்றுக் கொண்டிருந்தனர். அதில், இருந்த ஒரு நபர், அருகில் அமர்ந்திருந்த இளைஞரை கடுமையாக அடித்துள்ளார். அந்த இளைஞர் வேண்டாம் வேண்டாம் விட்டுங்க என்று கூறியும், அந்த நபர் தொடர்ந்து அடித்துக் கொண்டு இருந்தார். மேலும், அந்த இளைஞரை எட்டி உதைத்தும் உள்ளார். 






இதனை தொடர்ந்து, அந்த நபர் தனது கால்களை நக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த அந்த இளைஞரை கடுமையாக அடித்துள்ளார். இதனால் பயந்துபோன அந்த இளைஞர், அவரின் கால்களை நக்கி உள்ளார். பின்னர், அந்த இளைஞரை செருப்பால் கடுமையாக பலமுறை அடித்துள்ளார். இது சம்பந்தமான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.  


கைது


இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ வைரலானதை அடுத்து, 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில்,” ஒரு இளைஞரை இதுபோன்று கொடூரமாக தாக்கியது வருத்தமளிக்கிறது. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அளித்த புகாரில் 2 பேரை கைது செய்துள்ளோம். மேலும் சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தேடும் பணி நடைபெற்று வருகிறது" என்றனர்.