ஜார்காண்ட் மாநிலத்தில் தியோகர் மாவட்டத்தில் உள்ள திர்குட் மலைப்பகுதியில் ஏற்பட்ட ரோப் கார் விபத்தில் மக்கள் சிக்கக்கொண்டு தவித்த அனுபவங்களை வேதனையுடன் பகிர்ந்துள்ளனர்.


விபத்துக்குள்ளான ரோப் கார்களில் உள்ளவர்களை மீட்கும் பணி 45 மணி நேரத்திற்கும் மேலாக மேற்கொள்ளப்பட்டது. 2000 அடி உயரத்தில் சிக்கிக் கொண்ட மக்களை மீட்கும் பணி காற்றழுத்தம் காரணமாக மிகவும் கடினமாக இருந்ததாக பேரிடர் மீட்புக் குழு தெரிவித்தது. மேலும், இருட்டிவிட்டதால் மீட்புப் பணிகள் மாலையுடன் நிறுத்தி வைக்கப்பட்டன.


விபத்தில் சிக்கிக்கொண்ட வினய் குமார் தாஸ் கூறுகையில், “ரொம்ப நேரம் ரோப் காரிலேயே மாட்டிக்கொண்டோம். நாங்கள் தண்ணீர் குடித்து வெகு நேரமாகிவிட்டது. எப்போது இங்கிருந்து செல்வோம் என்ற பயம் மிகுந்திருந்தது. இன்னும் ரொம்ப நேரத்திற்கு தண்ணீர் கிடைக்காது என்று நினைத்தோம். அதனால், சிறுநீரை பாட்டில் சேமித்து கொண்டோம். வெகுநேரம் தண்ணீர் கிடைக்காமல் போனால், அதைக் குடிக்க பயன்படுத்தலாம் என்ற நிலைக்கு வந்தோம்.” என்று  ஆறு குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றாலா வந்த வினய் குமார் கூறினார்.


பீகார் மாநிலத்தில் இருந்து வந்திருந்த பெண் கூறுகையில், நாங்க ரோப் காரிலேயே இறந்து விடுவோம் என்று நினைத்தேன். ஆனால், பேரிடர் மீட்புக் குழுவினர் எங்களைக் காப்பாற்றிவிட்டனர்.” என்றார்.


ரோப் கார் விபத்து குறித்து சிறுமி ஒருவர் கூறுகையில், நாங்கள் தண்ணீர் குடித்து, சாப்பிட்டு ஓர் இரவுக்கு மேல் ஆகிவிட்டது. ஓர் இரவு முழுவதும் ரோப் காரிலேயே இருந்ததால் பசியால் தவித்தோம். ரோப் கார் நடுவழியில் நின்றபோது, கீழே விழுந்துவிடுவோம் என்று பயந்தேன்.” என்றார்.






ரோப் கார் விபத்து:


ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் திரிகுட் மலைப் பகுதி உள்ளது. இங்கே உள்ல பாபா வைத்தியநாத் கோயிலிலுக்கு செல்வதற்காக 20 கி.மீ. தூரத்துக்கு ரோப் கார் வசதி அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, 2 ரோப் கார்கள் நேற்று முன்தினம் மோதிக் கொண்டன. இதில் 2 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். 12 ரோப் கார்களில் 48 பேர் பல மணி நேரம் சிக்கித் தவித்தனர்.


இதுகுறித்து தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் விமானப்படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ரோப் காரில் இருந்த ஒரு பெண் கீழே விழுந்து உயிரிழந்தார்.


ரோப் கார்களில் சிக்கியவர்களை மீட்பதற்கான முயிற்சிகள் 20 மணி நேரத்துக்கு மேலாக நடந்தன. ஒரு ரோப் காரில் 4 பேர் உட்கார முடியும். 766 மீட்டர் நீளத்துக்கு, 392 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்ட இந்த ரோப் கார் வழித்தடத்தில், 25 கேபிள் கார்கள் இணைக்கப்பட்டுள்ளன.


தொடர்ந்து 44 மணி நேர மீட்புப் பணியில் இதுவரை 40 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த ஜார்காண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உத்தரவிட்டுள்ளார்.