குஜராத் நர்மதா ஆற்றில் சர்தார் சரோவர் அணை கட்டும் பணியை, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் என பிரச்சாரம் செய்து, அரசியல் ஆதரவுடன், அர்பன் நக்சல்கள் மற்றும் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் பல ஆண்டுகளாக முட்டுக்கட்டை போட்டுள்ளனர் என பிரதமர் மோடி இன்று விமர்சித்துள்ளார்.


 






குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் உள்ள ஏக்தா நகரில் சுற்றுச்சூழல் அமைச்சர்களின் தேசிய மாநாட்டை காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்த பின்னர், பல்வேறு மாநிலங்களின் சுற்றுச்சூழல் அமைச்சர்களுடன் மோடி உரையாற்றினார்.


அப்போது விரிவாக பேசிய மோடி, "அர்பன் நக்சல்கள் மற்றும் அரசியல் ஆதரவுடன் இருக்கும் வளர்ச்சிக்கு எதிரான சக்திகள், சர்தார் சரோவர் அணை கட்டும் திட்டத்தை முடக்கி, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பிரச்சாரம் செய்தனர். 


இந்த காலதாமதத்தால் பெரும் பணம் விரயமானது. இப்போது, ​​அணை கட்டி முடிக்கப்பட்டதும், அவர்களின் கூற்றுக்கள் எவ்வளவு சந்தேகத்திற்குரியவை என்பதை நீங்கள் நன்றாக தீர்மானிக்க முடியும்" என்றார்.


தொடர்ந்து பேசிய மோடி, "இந்த அர்பன் நக்சல்கள் இன்னும் செயல்பட்டு வருகின்றனர். எளிதாக, வர்த்தகம் செய்ய அல்லது வாழ்க்கையை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்ட திட்டங்கள் சுற்றுச்சூழலின் பெயரால் தேவையில்லாமல் முடக்கப்படாமல் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இப்படிப்பட்டவர்களின் சதியை முறியடிக்க நாம் ஒரு சமநிலையான அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டும்" என்றார்.


 






நாட்டில் அழியும் அபாயத்தில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறித்து பேசிய மோடி, “பல ஆண்டுகளாக, கிர் சிங்கங்கள், புலிகள், யானைகள், ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் மற்றும் சிறுத்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. நமிபியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட சிவிங்கி புலிக்கு இந்தியா அளித்த அன்பான வரவேற்பு. இந்தியாவின் தனித்துவமான விருந்தோம்பலின் உதாரணம்" என்றார்.


இந்த மாத தொடக்கத்தில் தனது பிறந்தநாள் அன்று, மத்திய பிரதேசத்தில் உள்ள குனா தேசிய பூங்காவில் நமீபியாவில் இருந்து எட்டு சிவிங்கி புலிகளை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். 1952இல் நாட்டில் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட சிவிங்கி புலிகள், இந்தியாவின் சிறுத்தை திட்டத்தை புதுப்பிக்கும் முயற்சியில் முக்கிய நடவடிக்கையாகும்.