அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தான் போட்டியிட முடிவு செய்துள்ளதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். மேலும் வேட்பு மனு தாக்கல் செய்யும் தேதியை விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.


 






அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (செப்.24) தொடங்கி செப்.30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.


தொடர்ந்து, அக்டோபர் 17ஆம் தேதி காலை 10 மணி முதல் 4 மணி வரை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 19ஆம் தேதி காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி அன்றைய தினமே தலைவர் யார் என அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு ராகுல்காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் சோனியா காந்தி இடைக்கால தலைவராக செயல்பட்டு வருகிறார்.


காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அசோக் கெலாட்டின் பெயரும் அடிபட்டு வந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.


முன்னதாக ராகுல் காந்தியே மீண்டும் காங்கிரஸ் தலைவராகப் பதவியேற்க வேண்டுமென்று அசோக் கெலாட் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.


”அனைவரது கோரிக்கைகளுக்கும் ஏற்ப காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்குமாறு நான் ராகுல் காந்தியிடம் பலமுறை கோரி வந்துள்ளேன். ஆனால் காந்தி குடும்பத்தைச் சேர்ந்த எவரும் அடுத்த தலைவராக வரக்கூடாது எனத் திட்டவட்டமாக அவர் தெரிவித்துவிட்டார்” எனக் கூறியிருந்தார்.


 






தொடர்ந்து “காங்கிரஸின் தலைவர் பதவிக்கு நான் தேவை என்று கட்சிக்காரர்கள் நினைத்தார்கள் என்றால் நான் வேண்டாம் என்று சொல்ல மாட்டேன்" எனக்கூறி தான் போட்டியிடுவதை கிட்டத்தட்ட நேற்று உறுதி செய்திருந்தார்.


2019ஆம் ஆண்டு, பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக வெற்றி பெற்றபோது, ​​பொதுத் தேர்தலில் கட்சி தோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று, அதே ஆண்டு காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ராகுல் காந்தி, மீண்டும் தலைவராக வருவதற்கு மறுத்துவிட்டார். செப்டம்பர் 21 ஆம் தேதிக்குள் காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், காலக்கெடு ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டது.


ஒருபுறம்  ராகுல் காந்தியை மீண்டும் காங்கிரஸ் தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கை அக்கட்சியின் தொண்டர்கள் குரல் எழுப்பி வரும் நிலையில், திருவனந்தபுரம் எம்பி சசி தரூர், மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கமல் நாத் ஆகியோரது பெயர்களும் முன்னதாக தலைவர் பதவிக்கு அடிபட்டு வந்தன.


20 ஆண்டுகளுக்கும் பிறகு நடைபெற உள்ள முதல் தேர்தலில் காந்தி குடும்பத்தை சேர்ந்த  எவரும் போட்டியிடாத நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர்கள் மணீஷ் திவாரி, பிருத்விராஜ் சவான், முகுல் வாஸ்னிக், மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோரும் இத்தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வருவதாகத் தகவல்கள் வந்துள்ளன.