UPSC: மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் (UPSC) மனோஜ் சோனி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
UPSC தலைவர் ராஜினாமா?
கடந்த 2017ம் ஆண்டு UPSC அமைப்பின் உறுப்பினரான சோனி, கடந்த 2023ம் ஆண்டு மே 16ம் தேதி அந்த அமைப்பின் தலைவரானார். அவரது பதவிக்காலம் வரும் 2029ம் ஆண்டு வரை உள்ள நிலையில், தனது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவருக்கு ஒரு மாதத்திற்கு முன்பே அனுப்பிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பதவிக்காலம் முடிய 5 ஆண்டுகள் இருக்கும் முன்பே மனோஜ் சோனி ராஜினாமா கடிதம் அனுப்பியும், அவரது முடிவு ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பது பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை. அதேநேரம், மனோஜ் சோனியின் ராஜினாமா முடிவுக்கும், போலி சான்றிதழ்களை கொடுத்து மத்திய அரசு பணி பெறுவதாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என கூறப்படுகிறது.
ஆன்மீக தொண்டில் ஈடுபட முடிவு
குஜராத்தில் உள்ள சுவாமிநாராயண் பிரிவின் கிளையான அனூபம் மிஷனில், தொண்டு செய்வதில் அதிக நேரம் ஒதுக்க மனோஜ் சோனி விரும்புவதாக கூறப்படுகிறது. அவர் கடந்த 2020 இல் தீட்சை பெற்று அந்த பிரிவில் ஒரு துறவி ஆனது குறிப்பிடத்தக்கது. எனவே, அவர் UPSC தலைவர் பதவியை ராஜினாமா செய்வதற்கும், தற்போது நிலவும் சர்ச்சைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறப்படுகிறது.
யார் இந்த மனோஜ் சோனி?
மனோஜ் சோனி பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவராகக் கருதப்படுகிறார். அவர் கடந்த 2005 ஆம் ஆண்டில் 40 வயதாக இருந்தபோது வதோதராவின் புகழ்பெற்ற எம்எஸ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். இதனால் நாட்டின் இளம் வயது துணைவேந்தர் என்ற பெருமையை அவர் பெற்றார். ஜூன் 2017ம் ஆண்டு UPSC-க்கு அவர் நியமனம் செய்யப்படுவதற்கு முன்பு, மனோஜ் சோனி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் இரண்டு பல்கலைக்கழகங்களில் மூன்று முறை துணைவேந்தராக பணியாற்றினார். பாபாசாகேப் அம்பேத்கர் திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (BAOU) துணை வேந்தராக, 2015 வரை இரண்டு முறை பணியாற்றினார்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்:
UPSC என்பது இந்திய அரசியலமைப்பின் பிரிவு 315-323 பகுதி XIV அத்தியாயம் II இன் கீழ் கட்டாயப்படுத்தப்பட்ட ஒரு அரசியலமைப்பு அமைப்பாகும். ஆணையம் மத்திய அரசின் சார்பில் பல தேர்வுகளை நடத்துகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் சிவில் சர்வீசஸ் தேர்வுகளை நடத்துகிறது மற்றும் ஐஏஎஸ், இந்திய வெளியுறவு சேவை (ஐஎஃப்எஸ்), இந்திய போலீஸ் சர்வீஸ் (ஐபிஎஸ்) மற்றும் மத்திய சேவைகள் - குரூப் ஏ மற்றும் குரூப் பி ஆகியவற்றிற்கு நியமனம் செய்ய தேர்வுகளை நடத்துகிறது. இந்த ஆணயம் ஒரு தலைவரால் வழிநடத்தப்பட, அதிகபட்சமாக 10 உறுப்பினர்களைக் கொண்டிருக்கலாம்.