உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், அங்கு பரபரப்பு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. மத வேறுபாடுகளை கடந்து லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த தம்பதியினர் பாதுகாப்பு கேட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.


பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தை நாடிய தம்பதி: ஆனால், புதிதாக அமலுக்கு வந்துள்ள பொது சிவில் சட்டத்தின்படி, அதில் பதிவு செய்து கொண்டால் மட்டுமே பாதுகாப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


உத்தரகாண்டில் இந்து மதத்தை சேர்ந்த 26 வயது பெண் ஒருவரும் இஸ்லாம் மதத்தை சேர்ந்த 21 வயது ஆண் ஒருவரும் கடந்த சில ஆண்டுகளாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்துள்ளனர். பாதுகாப்பு கோரி இவர்கள் தாக்கல் தொடர்ந்து வழக்கில்தான் நீதிமன்றம் இம்மாதிரியான உத்தரவை பிறப்பித்துள்ளது.


இருவரும் 18 வயதை தாண்டியவர்கள் என்றும் வேறு வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்றும் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகின்றனர் என்றும் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர். மனுதாரர்களில் ஒருவரின் பெற்றோரும், சகோதரரும் அவர்களுக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.


ஷாக் கொடுத்த நீதிமன்றம்: இதையடுத்து, உத்தரகாண்ட் பொது சிவில் சட்டப்பிரிவு 378(1)ஐ மேற்கோள் காட்டிய மாநில அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், "உத்தரகாண்ட் மாநிலத்தில் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதால், இந்த மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி பிரிவு 381 துணைப்பிரிவு (1) இன் கீழ், தாங்கள் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறோம் என்பதை பதிவாளரிடம் பதிவு செய்ய வேண்டும்" என வாதிட்டார்.


உத்தரகாண்ட் பொது சிவில் சட்டத்தின்படி, லிவ்-இன் உறவுக்கு வந்து ஒரு மாதத்திற்குள் பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால், மூன்று மாதங்கள் சிறை தண்டனையோடு, ரூ.10,000 அபராதம் விதிக்கப்படலாம். 


இதை கருத்தில் கொண்ட நீதிமன்றம், "மனுதாரர்கள் 48 மணி நேரத்திற்குள் மேற்கூறிய சட்டத்தின் கீழ் பதிவு செய்ய விண்ணப்பித்தால், தனிப்பட்ட பிரதிவாதிகளிடமிருந்தோ அல்லது அவர்களின் உத்தரவின் பேரில் செயல்படும் வேறு நபரிடமிருந்தோ அவர்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாதவாறு ஆறு வாரங்களுக்கு மனுதாரர்களுக்கு காவல்துறை தகுந்த பாதுகாப்பை வழங்க வேண்டும்" என உத்தரவிட்டார்.


லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்கள் பதிவு செய்யும்போது தவறான  தகவல்களை வழங்கினால்  மூன்று மாதங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்களின் அறிக்கைகள் உள்ளூர் காவல்நிலைய அதிகாரிக்கு அனுப்பப்பட்டு சரிபார்க்கப்படும்.


அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் தவறாக இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரகண்ட் பொது சிவில் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.