பானிபூரி சாப்பிட வாயை திறந்தபோது, மீண்டும் மூட முடியாமல் பெண் ஒருவர் அவதிப்பட்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது. வீடியோவில் பதிவான இந்த சம்பவம், விரைவில் வைரலாகி, நாடு முழுவதும் உள்ள பானிபூரி பிரியர்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியது.
பானிபூரி சாப்பிடும்போது நேர்ந்த விபரீதம்
உத்தரபிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் இன்கிலா தேவி என்ற பெண் தனது குடும்ப உறுப்பினருடன் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையோர கடையில் பானிபூரி சாப்பிட நினைத்துள்ளார். கடைக்காரர் ஒவ்வொரு பானிபூரியை வைத்துகொண்டு வந்துள்ளார். ஒரு பெரிய பானிபூரியை வைத்தபோது, அதை சாப்பிட வாயை திறந்த அப்பெண்ணின் வாய் அப்படியே நின்றுவிட்டது. தாடை இடம்பெயர்ந்து விட்டதால் வாய் திறந்த நிலையிலேயே இருந்துள்ளது.
அப்பெண்ணின் தாடை திடீரென இடம்பெயர்ந்து, வாய் திறந்த நிலையில் சிக்கிக் கொண்டு மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்தியது. அதிர்ச்சியடைந்த குடும்ப உறுப்பினர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் ஆரம்ப சிகிச்சையை வழங்கினர். ஆனால், இன்னும் மேம்பட்ட சிகிச்சை தேவை என்பதால், பின்னர் மேல் சிகிச்சைக்காக உயர்மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இன்கிலா தேவி அளவுக்கு மீறி வாய் திறந்ததால், அவரின் தாடை இடம்பெயர்ந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
டாக்டர்கள் அட்வைஸ்
பானிபூரி இந்தியர்களின் விருப்பமான சிற்றுண்டியாக இருந்தாலும், மருத்துவர்கள் அதனை கவனமாக ருசிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். குறிப்பாக தாடையை கஷ்டப்படுத்தும் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
தாடை இடப்பெயர்வு
கீழ் தாடை எலும்பு (தாடை எலும்பு) டெம்போரோமாண்டிபுலர் மூட்டில் அதன் இயல்பான நிலையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு, வாய் சரியாக மூடுவதைத் தடுக்கும்போது இடப்பெயர்ச்சி ஏற்படுகிறது. இப்படி நடந்துவிட்டால் உடனடியாக அருகே உள்ள மருத்துவரிடம் சென்றால், அவர் தாடையை மெதுவாக மீண்டும் இடத்திற்கு நகர்த்துவார்.