ஹோலி பண்டிகையானது, இந்தியாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள மாநிலங்களில் பெரும் விமரிசையாக கொண்டாடப்படும் திருவிழாவாக பார்க்கப்படுகிறது.


ஹோலி பண்டிகை


இந்த விழாவின்போது, அன்புக்குரிய உறவுகள் மீது வண்ணப்பொடிகளை பூசி மகிழ்ச்சியையும் அன்பையும் வெளிப்படுத்தும், கொண்டாடும் விழாவாக பார்க்கப்படுகிறது. சிலர் வண்ண கலவையிலான நீரை, அதை ஏற்பவர்களின் மீது ஊற்றியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். ஹோலி பண்டிகையானது மார்ச் 25-ஆம் தேதி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பெரும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.


இந்நிலையில், ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின்போது, உத்தர பிரதேசம்  வாரணாசியில் நடந்த சம்பவம் என்று சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி அதிர்ச்சியை கிளப்பிவருகிறது.


கும்பலின் கொடூரம்:


அந்த வீடியோவில், ஒரு தம்பதி  இருவரும் நடந்து சென்று  கொண்டிருக்கும்போது, அங்கிருக்கும் கும்பல் ஒன்று அந்த ஜோடியின் மீது தண்ணீரை ஊற்றினர். இதனால் கோபமடைந்த  இருவரும், தண்ணீரை ஊற்ற வேண்டாம் என்று எச்சரித்தனர். இருப்பினும் மீண்டும் அந்த கும்பலில் இருந்தோர், தண்ணீரை ஊற்றி அட்டகாசம் செய்தனர்.  அந்த கும்பலில் இருந்தவர்கள் செய்வதை பார்த்து, அங்கிருக்கும் சிறுவன் ஒருவனும், தவறு என்று உணராது தம்பதி மீது தண்ணீர் ஊற்றினான். இது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஹோலி கொண்டாட்ட தினத்தின்போது, ஹோலி பண்டிகையை மற்றவர்களை அவமானப்படுத்துவதற்காக, தவறாகப் பயன்படுத்துவது, பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.


இந்த வீடியோவானது, தற்போது சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு கண்டிக்கப்பட்டு வருகிறது.






நடவடிக்கை தேவை:


இது குறித்து சமூக வலைதள பயனர் ஒருவர் தெரிவிக்கையில், ”ஒரு விழாவை தவறாக பயன்படுத்தும் இவர்களை சும்மா விடக்கூடாது. மேலும் கும்பலில் பெரிய நபர்கள் செய்வதை பார்த்து, சிறியவர்களும் ஈடுபடுவது சமூகம் எப்படி வளர்கிறது என்பதை காண்பிக்கிறது” எனவும் தெரிவித்துள்ளார். ஹோலி அன்று, இஸ்லாமியர்கள் மீதும் வலுக்கட்டாயமாக வண்ணங்களை ஊற்றிய வீடியோ ஒன்று பரவி, அதிர்ச்சி அலைகளைக் கிளப்பியது


சுதந்திரமடைந்த இந்தியாவில், மகிழ்ச்சியாக நடமாட முடியாத சூழல் சில இடங்களில் நிகழ்வதை பார்க்கும்போது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு, அரசாங்கம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் இதுபோன்ற செயல்கள், இனி வருங்காலங்களில்  நிகழாத வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.