பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு நமோ செயலி மூலம் பாஜக நிர்வாகிகளிடம் உரையாற்ற உள்ளார். ‘எனது பூத் வலிமையான பூத்’ என்ற தலைப்பின் கீழ் உரையாற்ற இருக்கிறார். 






இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “ நமது கடின உழைப்பாளர்களான பாஜக நிர்வாகிகளுடன் நமோ செயலி மூலம் இன்று மாலை 5 மணிக்கு உரையாற்ற உள்ளேன். பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பாஜகவின் நல்லாட்சி பற்றி தமிழ்நாட்டு மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளது பாராட்டுக்குறிய விஷயம். அதேபோல் திமுக ஆட்சியில் மக்கள் சலிப்படைந்துள்ளதும் உண்மை தான். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியை மிகுந்த நம்பிகையுடன் மக்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்” என தெரிவித்துள்ளார். 


நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவையில் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் முடிந்து ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்னரே பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு சூறாவளி பயணம் மேற்கொண்டார். பாஜக பொதுக்கூட்டம் மற்றும் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக வருகை தந்திருந்தார். 


வருகின்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக எப்படியாவது காலூன்ற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் பேசுகையில் திமுக அரசை விமர்சித்து உரையாற்றினார். மேலும் கடலூருக்கு பிரதமர் மோடி வருகை தந்து நிகழ்ச்சியில் பேசிய போது, ’நமோ செயலி மூலம் இனி தமிழில் நீங்கள் எனது குரலை கேட்கலாம்” என குறிப்பிட்டிருந்தார். அந்த வகையில் இன்று மாலை 5 மணிக்கு நமோ செயலி மூலம் எனது பூத் வலிமையான பூத் என்ற தலைப்பின் கீழ் உரையாற்ற உள்ளார்.