இந்தியாவின் வைர நகரம் என அழைக்கப்படும் சூரத்தில் அமைந்துள்ள பிரபல வைர தயாரிப்பு நிறுவனம் ஒன்று, ஊழியர்களை மிகழ்ச்சி கடலில் தள்ளும் வகையில் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் 50,000 ஊழியர்களை 10 நாள்கள் விடுமுறைக்கு அனுப்ப உள்ளது.


ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்: பொருளாதார மந்தநிலை காரணமாக சர்வதேச சந்தைகளில் பாலிஷ் செய்யப்பட்ட வைரங்களுக்கான தேவை குறைந்துள்ளது. இதனை காரணம்காட்டி வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை, தனது ஊழியர்களை விடுமுறைக்கு அனுப்ப உள்ளார் கிரண் ஜெம்ஸ் வைர நிறுவனத்தின் தலைவர் வல்லபாய் லக்கானி.


ஆனால், இதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை சம்பளத்தில் குறைக்க உள்ளதாக ட்விஸ்ட் வைத்துள்ளார். இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அவர் பேசுகையில், "50,000 ஊழியர்களுக்கு 10 நாள் விடுமுறை அறிவித்துள்ளோம்.


இதற்காக, குறிப்பிட்ட தொகையை சம்பளத்தில் இருந்து கழிப்போம். இருப்பினும், குறிப்பிட்ட அந்த 10 நாள்களுக்கு அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்கப்படும். மந்தநிலை காரணமாக இந்த விடுமுறையை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இந்த மந்தநிலையால் நான் இப்போது சோர்வாக இருக்கிறேன்.


வைர வியாபாரி வைத்த ட்விஸ்ட்: வைர தேவையின் வீழ்ச்சியால் மற்ற வைர நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்நிறுவனங்கள் அமைதியாக உள்ளன. மக்கள் எதார்த்தத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இதை முன்கூட்டியே அறிவித்தோம்.


ஊழியர்களுக்கான இந்த விடுமுறை எங்கள் உற்பத்தியை பெருக்க உதவும். இந்த மந்தநிலைக்குப் பின்னால் உள்ள சரியான காரணங்கள் யாருக்கும் தெரியாது" என்றார்.


இதுகுறித்து சூரத் வைர நிறுவன கூட்டமைப்பு தலைவர் ஜகதீஷ் குந்த் பேசுகையில், "மந்தநிலை உள்ளூர் வைரத் தொழிலை பாதித்துள்ளது. இங்கிருந்துதான், உலகின் வைரங்களில் கிட்டத்தட்ட 90 சதவீதம் உற்பத்தி செய்யப்படுகிறது.


இதுபோன்ற விடுமுறையை (ஊழியர்களுக்கு) கிரண் ஜெம்ஸ் வைர நிறுவனம் அறிவித்தது இதுவே முதல் முறை. வேறு எந்த நிறுவனமும் இதுபோன்ற நடவடிக்கையை இதுவரை எடுக்கவில்லை என்றாலும், மந்தநிலையால்  பாலிஷ் செய்யப்பட்ட வைரங்களின் விற்பனை குறைந்துள்ளது என்பது நிதர்சனம்.


பாலிஷ் செய்யப்பட்ட வைரங்களில் 95 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுவதால், வைர கற்களின் விற்பனையை உலகளாவிய காரணிகளே எப்போதும் தீர்மானிக்கின்றன. ரஷியா - உக்ரைன் போர் மற்றும் இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் ஆகியவை சில காரணிகளாகும்" என்றார்.