வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ மக்களவையில் தாக்கல் செய்தார். 


இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் தானமாக வழங்கிய நிலங்கள் மூலம் வரும் வருவாய்கள் இஸ்லாமியர்களின் கல்வி செலவு உள்ளிட்டவைகளுக்கு பயபடுத்தப்பட்டு வருகிறது. இதற்கு என்று வக்பு வாரிய சட்டம் 1995ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போது புது விதிகளை வக்பு வாரிய சட்டத்தில் மத்திய அரசு புகுத்தியுள்ளது. 



இந்த புதிய திருத்தத்தில் வக்பு வாரியங்களின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் எனவும் இஸ்லாமிய பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது எனவும் வாரிய அதிகாரியத்தை ஒழுங்குபடுத்து எனவும் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிகிறது. 


மத்திய அமைச்சர் தாக்கல் செய்த இந்த மசோதாவுக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றனர். 



இதுகுறித்து திமுக எம்.பி கனிமொழி மக்களவையில் பேசுகையில், “வக்பு வாரியத்தில் இஸ்லாமியர் அல்லாதவர் உறுப்பினராக முடியும் என்பது மத சுதந்திரத்துக்கு எதிரானது. எதற்காக ஒரு மதத்தின் உரிமையில் மற்றொரு மதத்தினர் தலையிட வேண்டும்? அரசு சொத்துகள் வக்பு வாரியத்திடம் இருந்தால் அதுகுறித்து மாவட்ட ஆட்சியர்கள் முடிவு எடுக்கலாம் என்பது ஏற்கத்தக்கதல்ல. வக்பு வாரிய சட்டதிருத்தம் மனித இனத்துக்கே எதிரானது. அரசியல் அமைப்பு சட்டத்துக்கு முற்றிலும் எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. கூட்டாட்சி தத்துவம், மத சுதந்திரம் ஆகியவற்றுக்கு எதிராக வக்பு வாரிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்படுகிறது” எனத் தெரிவித்தார். 


அதேபோல் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு ஏஐஎம்.ஐ.எம் கட்சித் தலைவர் ஓவைசி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா பாரபட்சமாக கொண்டுவரப்பட்டுள்ளது என தெரிவித்தார். 






இதுகுறித்து பேசிய ஜேடி(யு) எம்.பி.யும், மத்திய அமைச்சருமான ராஜீவ் ரஞ்சன், "இது எப்படி முஸ்லிம்களுக்கு எதிரானது? வெளிப்படைத்தன்மையை கொண்டு வரவே இந்த சட்டம் இயற்றப்படுகிறது. எதிர்க்கட்சிகள் அதை கோவில்களுடன் ஒப்பிட்டு முக்கியப் பிரச்சினையில் இருந்து திசை திருப்புகிறார்கள். கே.சி.வேணுகோபால் (காங்கிரஸ்) ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் எப்படி கொல்லப்பட்டார்கள் என்பதை விளக்க வேண்டும். இந்திரா காந்தியைக் கொன்ற டாக்ஸி டிரைவர் யார்?” என கேள்வி எழுப்பினார்.