கொரோனா பெருந்தொற்று பாதிப்பின் இரண்டாவது அலை சற்று குறைய தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக குறைந்த வந்த தொற்று பாதிப்பு இன்று ஒரு லட்சத்திற்கும் கீழே பதிவாகியுள்ளது.  நாடு முழுவதும் தற்போது ஆக்சிஜம் பற்றாகுறையும் தற்போது குறைய தொடங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு மிகவும் அதிகரித்தது. குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் ஏப்ரல் மாதத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக பல இடங்களில் மக்கள் ஆக்சிஜன் பெற கூட்டம் கூட்டமாக தேடி சென்றனர். 


இதுபோன்ற சமயத்தில் ஆக்ரா மாவட்டத்தில் அமைந்திருந்த தனியார் மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டால் எத்தனை நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள் என்று கண்டறிய ஒரு விபரீத சோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்தச் சோதனை தொடர்பாக அந்த மருத்துவமனையின் நிறுவனர் கூறும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியது. அதில், "கொரோனா பரவல் காரணமாக பல இடங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது எங்கள் மருத்துவமனையில் இருந்த சிலரை நாங்கள் ஆலோசனை வழங்கி வீட்டிற்கு திருப்பி அனுப்பினோம்.


மேலும் உண்மையாக எங்களுடைய மருத்துவமனையிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பாட்டல் எத்தனை பேருக்கு ஆக்சிஜன் தீவிரமாக தேவைப்படும் என்பதை அறிய விரும்பினோம். இதற்காக நாங்கள் காலை  7 மணிக்கு எங்களுடைய மருத்துமனையில் சில நேரம் ஆக்சிஜன் சப்ளையை நிறுத்தினோம். அப்போது கிட்டதட்ட 22 பேருக்கு ஆக்சிஜன் தேவை என்று கண்டறிந்தோம். அவர்கள் அனைவரும் ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்ட உடன் நீல நிறத்தில் மாற தொடங்கினர். இதனால் அவர்கள் ஆக்சிஜன் நிறுத்தப்பட்டால் இறந்துவிடுவார்கள் என்பதையும் அறிந்து கொண்டோம்" எனத் தெரிவித்துள்ளார். 




இவரின் இந்தச் சர்ச்சைக்குரிய வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியில் பதிவு ஒன்றை செய்திருந்தார். அதில், "இந்த மாதிரி மக்கள் உயிர் விஷயத்தில் அலட்சியமாக நடந்து கொண்டவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜக ஆளும் மாநிலங்களில் ஆக்சிஜன் மற்றும் மனிதநேயம் ஆகிய இரண்டும் குறைப்பாடாக உள்ளது" எனத் தெரிவித்திருந்தார். 


இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளருகளுக்கு ஆக்ரா மாவட்ட ஆட்சியர் பிரபு என் சிங்,"இந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியன்று அந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக எந்தவித மரணமும் ஏற்படவில்லை. மேலும் இந்த மருத்துவமனை நிறுவனர் மீது தொற்று நோய் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 55 நோயாளிகளையும் வேறு மருத்துவமனைக்கு மாற்றியுள்ளோம். இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க: யோகிக்கு குடைச்சல் கொடுக்கிறதா பாஜக?- உ.பி. அரசியல் சதுரங்கம்