கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் எடமலக்குடி என்ற பழங்குடி பஞ்சாயத்திற்கு உட்பட்ட அரசுப்பள்ளியில் பழங்குடியின மாணவர்களுக்கு பாடம் எடுப்பதற்காக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மூன்று பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு 14 கி.மீ நடந்து சென்று பாடம் எடுத்துவருகின்றனர். இந்த பஞ்சாயத்தில் உள்ள மாணவர்களுக்கு டிஜிட்டல் முறையில் ஆன்லைன் வகுப்புகளை எடுப்பது என்பது இன்னும் தொலைதூர கனவாகவே உள்ளது. கேரளாவின் முதல் பழங்குடியின பஞ்சாயத்தான எடமலக்குடிக்கு நடந்து செல்வது என்பது சிரமமான ஒன்றாகும், கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்ட இந்த நேரத்தில் அக்கிராமத்திற்கு செல்லும் பாதைகள் கரடு முரடாக இருக்கும். இந்த சிரமங்களை கடந்தும் 54 வயதான வாசுதேவன் பிள்ளை மற்றும் டி.ஆர்.சிம்மலால், அர்ஜுன் கே ஆனந்த் உள்ளிட்ட மூன்று ஆசிரியர்களும் செல்கின்றனர்.


எடமலக்குடியில் முந்துவன் பழங்குடியினத்தை சேந்த 2,509 பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் தமிழ்-மலையாளம் மொழிகள் கலந்த பேச்சு வழக்கை பேசுகின்றனர். 106 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள பஞ்சாயத்தில் 26 பழங்குடி குடியேற்றங்கள் தற்போது உள்ளன.



இதுவரை எடமலக்குடி கிராமத்தில் கொரோனா தொற்று பாதிப்பு என்பது யாருக்கும் ஏற்படவில்லை. இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்தபோதே எடமலக்குடி பஞ்சாயத்தில் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பஞ்சாயத்து நடைமுறைப்படுத்த தொடங்கிவிட்டது. எடமலைக்குடியை அடையும் ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வீட்டில் 2 வார காலத்திற்கு தங்கி கல்விப்பணிகளை மேற்கொள்கின்றனர். இப்பகுதியில் யானை மற்றும் காட்டுப்பன்றிகள் மீதான அச்சம் காரணமாக தாங்கள் தங்கும் ஒற்றை அறையை மாலை 5 மணிக்கு மேல் தாழிட்டுவிட்டு உள்ளே தங்குகின்றனர் ஆசிரியர்கள்.


புதிய கல்வியாண்டு தொடங்கி உள்ள நிலையில்  இத்தகைய சிரமங்கள் மற்றும் கொரோனா மீதான கவலைகளுக்கு மத்தியிலும் பழங்குடியின பள்ளியில்  ஜூன் ஒன்றாம் தேதி ஒன்றாம் வகுப்பில் சேர்வதற்காக 8 பேர் வந்திருந்ததாக, அப்பள்ளியில் கடந்த 2 ஆண்டுகளாக தலைமை ஆசிரியாராக உள்ள வாசுதேவன் பிள்ளை குறிப்பிடுகிறார்.


டிஜிட்டல் வசதிக்காக காத்திருந்தால் பழங்குடியின மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு கொண்டுவருவது கடினம் எனக் கூறும் ஆசிரியர்கள், கோவிட் தடுப்பு வழிமுறைகளை கடுமையாக பின்பற்றி வகுப்புகளை நடத்தி வருவதாக தெரிவிக்கின்றனர். இக்கிராமத்தில் 4-ஆம் வகுப்பு வரை பாடங்கள் சத்ரம் என்ற பொதுவான இடத்தில்தான் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதற்குமேல் வகுப்புகளை பயிலவேண்டும் என்றால் 40 கி.மீ தூரத்தில் உள்ள மூணார் பகுதிக்கு சென்று பழங்குடியின மாணவர்கள் கல்வி பயில வேண்டிய நிலை இருந்தது. இந்த சிரமத்தை தவிர்க்க 5, 6, 7 ஆம் வகுப்புகளுக்கு பாடம் நடத்த கல்வித்துறை சிறப்பு அனுமதி கொடுத்துள்ளது.



தற்போது இப்பள்ளியில் 106 பழங்குடியின மாணவர்கள் பயிலும் நிலையில், அவர்களில் 67 பேர் ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். பழங்குடியின மாணவர்களிடம் பள்ளிக்கு வரும் ஆர்வத்தை தூண்டுவதற்காக பஞ்சாயத்து நிர்வாகத்துடன் இணைந்து பலவித காலை உணவுகள் வழங்கப்படுகின்றன. அரசின் விதிப்படி மதிய உணவு வழங்கப்பட்டாலும் காலை உணவாக இட்லி, தோசை, பரோட்டா ஆகிய உணவுகள், காலை சிற்றுண்டியாக வழங்கப்படுகின்றன.


தங்கள் குடியிருப்பில் இருந்து பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்கள் தங்கள் தலையில் காலை உணவுக்கான பாத்திரத்தை சுமந்துகொண்டே பள்ளிக்கு வருகின்றனர். கொரோனா தொற்று பரவும் நிலையில் இப்பஞ்சாயத்துக்கு வெளியாட்கள் வர வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இக்கிராமத்திற்கு வரும் சுகாதாரம், வருவாய், கல்வி மற்றும் வனத்துறையினர் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். மேலும் இக்கிராமத்திற்கு ஆய்வு மேற்கொள்ள செல்லும் முன்  RT-PCR சோதனை செய்துகொண்டு அந்த முடிவுகள் வந்த பிறகே எடமலக்குடிக்கு செல்வது குறிப்பிடத்தக்கது