மகாபாரதத்தில் குந்தி தேவி, குழந்தையை கூடையில் வைத்து ஆற்றில் மிதக்க விடுவார். தளபதியில் ரஜினியே ஆற்றில் மிதந்து வரும் குழந்தையாக இருப்பார். இப்படி மகாபாரதம் முதல் ரஜினியின் தளபதி வரை குழந்தையை கூடையில் வைத்து ஆற்றில் விட்ட கதையை நாம் கேட்டிருப்போம். இன்று அப்படியான ஒரு கதை உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.


உத்தரப்பிரதேசம் காசிப்பூர் பகுதியில் கங்கை நதி கரையோரம் குலுசவுத்ரி என்ற படகோட்டி சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது தூரத்தில் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. குழந்தையின் அழுகை அருகில் நெருங்கி வந்துள்ளது. உன்னிப்பாக கவனித்த குலுசவுத்ரிக்கு  ஆற்றில் ஒரு  மரப்பெட்டி மிதந்து வருவது தெரிந்துள்ளது. உடனடியாக ஆற்றுக்குள் இறங்கி மரப்பெட்டியை அப்பகுதி மக்கள் மீட்டுள்ளனர், உள்ளே திறந்து பார்த்தபோது பெட்டிக்குள் பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை இருந்துள்ளது. மர வேலைப்பாடுகளுடன் கூடிய அந்த மரப்பெட்டியில் காளிதேவியின் புகைப்படத்துடன் சிவப்பு நிற துணியில் சுற்றி இருந்துள்ளது அக்குழந்தை.இந்தக்குழந்தையை தானே வளர்க்கவுள்ளதாக வீட்டிற்கு தூக்கிச் சென்றுள்ளார் படகோட்டி.




ஆனால் இந்த விவகாரம் போலீசாருக்கு தெரியவர குழந்தையை மீட்டு காப்பகத்தில் இப்போது ஒப்படைத்துள்ளனர். கங்கையில் மிதந்து வந்த செல்லமகளின் விவரம் முதலமைச்சர் யோகி காதுகளுக்கும் சென்றுள்ளது. இதனை அடுத்து கங்கையில் மிதந்து வந்த குழந்தையை அரசே தத்தெடுக்கும் என்றும், குழந்தைக்கான வளர்ப்பு, கல்வி, வீடு உள்ளிட்ட தேவையை அரசே செய்யும் என தெரிவித்துள்ளார். மேலும் குழந்தையை ஆற்றில் இருந்து மீட்டு வளர்க்க ஆசைப்பட்ட படகோட்டியிடமே குழந்தையை முறைப்படி ஒப்படைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கங்கையில் மிதந்து வந்த குழந்தைக்கு கங்கா என்று பெயரிடப்பட்டுள்ளது. 


இந்தியர்களின் ஹஜ் புனிதப்பயண விண்ணப்பங்கள் ரத்து - ஹஜ் கமிட்டி குழு அறிவிப்பு


இந்த விவகாரம் தொடர்பாக தெரிவித்துள்ள போலீசார், முறையாக பாதுகாப்பாக ஒரு மரப்பெட்டியை தயார் செய்து குழந்தையை ஆற்றில் மிதக்க வைத்துள்ளனர். மீட்கப்பட்டதுமே குழந்தையின் உடல்நிலையை பரிசோதித்தோம். ஆரோக்கியமாக உள்ளது. இது தொடர்பாக விசாரணையும் நடைபெறுகிறது என்றனர்.




கங்கை நதியில் மரப்பெட்டியில் குழந்தை மிதந்து வந்த சம்பவம் அப்பகுதியில் மட்டுமல்ல, இணையத்திலும் வைரலானது. கங்கையில் மிதந்து வந்த கங்காவுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். பெண் குழந்தையான கங்கா, எதிர்காலத்தில் பெரிய சாதனைகளை செய்ய வேண்டுமென கருத்து பதிவிட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி குழந்தையின் அழுகை சத்தத்தை கேட்டு துரிதமாக செயல்பட்டு குழந்தையை மீட்ட படகோட்டி குலுசவுத்ரிக்கும் இணையவாசிகள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். படகோட்டியின் துரித நடவடிக்கை ஒரு பிஞ்சுக்குழந்தையின் வாழ்க்கையை காப்பாற்றியுள்ளது என பதிவிட்டுள்ளனர்.


இந்தியாவில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளும் போட்டுக்கொண்டவர்கள் எத்தனை பேர் தெரியுமா?