உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். இஸ்லாமியர்களின் மதக் கடமைகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்வதாகும். சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவிற்கு ஆண்டுதோறும் பல நாடுகளைச் சேர்ந்த புனிதப்பயணிகள் ஹஜ் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
உலகின் மிகப்பெரிய புனித விழாக்களில் ஒன்றாக திகழும் இந்த விழாவில். கடந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக பல நாடுகளைச் சேர்ந்தவர்களால் பங்கேற்க முடியவில்லை. இந்த நிலையில், நடப்பாண்டிலும் கொரோனா இரண்டாவது அலை காரணமாக இந்தாண்டும் புனிதப்பயணம் வருபவர்களுக்கு சவுதி அரேபியா கடுமையான கட்டுப்பாடுகளை தொடர்ந்து விதித்துவந்தது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ஹஜ் யாத்திரை மேற்கொள்பவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு செலுத்தாமல் வந்தால் கட்டாயம் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அந்த நாட்டு அரசு தெரிவித்திருந்தது. இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு, புனித ஹஜ் பயணத்தில் 60 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசு அறிவித்தது. சவுதி அரேபியாவில் வசிக்கும் 60 ஆயிரம் நபர்களுக்கு மட்டுமே அந்த அனுமதி வழங்கப்படும் என்று அறிவித்தது. இதனால், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்திய ஹஜ் கமிட்டி குழு இன்று வெளியிட்ட அறிவிப்பில், “சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் கொரோனா தொற்றுநோய்களின் காரணமாக, சவுதி அரேபியாவிற்குள் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களை மட்டுமே ஹஜ் புனிதப்பயணத்தில் கலந்துகொள்ள அனுமதிக்க முடிவு செய்துள்ளது. இதனால், சர்வதேச ஹஜ் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. எனவே ஹஜ் 2021 ஸ்டாண்டிற்கான அனைத்து விண்ணப்பங்களும் ரத்து செய்யப்படுவதாக இந்தியாவின் ஹஜ் கமிட்டி முடிவு செய்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டிலும் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்ள இயலாதது இஸ்லாமியர்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு சவுதி அரேபியாவில் வசித்த 1000 பேருக்கு மட்டுமே ஹஜ் புனிதப்பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : ''10 நிமிடங்களில் ரூ.16 கோடி உயர்ந்ததா அயோத்தியின் நிலம்? - பரபரப்பை உண்டாக்கிய குற்றச்சாட்டு!