UP Laddu Fest: உத்தரபிரதேச மாநிலம், பாக்பத்தில் உள்ள திகம்பர் ஜெயின் கல்லூரியில், பகவான் ஆதிநாத் நிர்வாண லட்டு திருவிழாவின் போது, மேடை சரிந்து விழுந்ததில் ஏழு பேர் உயிரிழந்தனர்.
லட்டு திருவிழாவில் விபத்து:
பராவுட்டில் உள்ள ஜெயின் சமூகத்தினர் முதல் தீர்த்தங்கரரான பகவான் ஆதிநாத்தின் 'நிர்வான் லட்டு பர்வ்' என்ற இடத்தில் ஒரு தற்காலிக மேடை அமைத்து 'லட்டு மஹோத்சவ்' விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக தற்காலிக மேடை அமைக்கப்பட்டு இருந்த நிலையில், நூற்றுக்கணக்கான மக்கள் லட்டுகளை வாங்க குவிந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக மேடை சரிந்து விழுந்ததில் ஜெயின் சமூகத்தினர் மற்றும் பக்தர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், காவல்துறையினர் உட்பட 50 பேர் காயமடைந்தனர். சம்பவம் நடந்தபோது பக்தர்கள் 'முக்கிய ஸ்தம்பத்தில்' லட்டுகளை வாங்க குவிந்தனர்.
மீட்பு பணிகள் தீவிரம்:
இடிந்து விழுந்ததால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பும், பீதியும் ஏற்பட்டது. இடிந்து விழுந்த மேடையின் கீழே சிக்கியவர்களை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பாக்பத் மாவட்ட ஆட்சியர், அஸ்மிதா லால் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் அர்பித் விஜயவர்கியா ஆகியோர் காயமடைந்தவர்களின் நலனை அறிய மாவட்ட மருத்துவமனைக்கு விரைந்தனர்.
தகவல் அறிந்ததும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளார்.