நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்று மிகவும் தீவிரம் அடைந்துவருகிறது. குறிப்பாக டெல்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மிகவும் வேகமாக பரவி வருகிறது. அங்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நோயாளிகளுக்கு மருத்துவமனை படுக்கை கிடைக்காமல் தவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் தட்டுப்பாடும் அந்த மாநிலங்களில் அதிகமாக உள்ளது.
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் எம்.எல்.ஏ ஒருவரின் மனைவிக்கே மூன்று மணிநேரமாக கொரோனா சிகிச்சைக்கு மருத்துவமனையில் படுக்கை கிடைக்கவில்லை என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தின் ஃபேரோசாபாத் மாவட்டத்தின் ஜஸ்ரானா தொகுதி எம்.எல்.ஏ ராம் கோபால் லோதி. இவருக்கும் இவருடைய மனைவிக்கும் சமீபத்தில் கொரோனா தொற்று உறுதியானது. இதனைத் தொடர்ந்து இருவரும் அப்பகுதியிலுள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்துள்ளனர். இந்தச் சூழலில் எம்.எல்.ஏவின் மனைவிக்கு நோய் தொற்று அதிகமாக இருந்ததால் அவருடைய நிலைமை சற்று மோசமானது. இதனால் அவரை ஆக்ராவில் உள்ள எஸ்.என் மருத்துவமனைக்கு மாற்ற மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். எனினும் எஸ்.என் மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லை எனக்கூறி அந்த மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக எம்.எல்.ஏ லோதி ஒரு வீடியோ பதிவை செய்தார். அதில், "எம்.எல்.ஏ மனைவிக்கே கொரோனா சிகிச்சைக்கு படுக்கை கிடைக்க சிரமமாக உள்ளது. அப்போது சாதாரண மக்களுக்கு எப்படி சிகிச்சைக்கு படுக்கை கிடைக்கும்" எனப் பதிவிட்டிருந்தார். இந்த தகவல் அறிந்து வந்த ஆக்ரா மாவட்ட ஆட்சியர் மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசி படுக்கை வசதியை உறுதி செய்தார். எனினும் மருத்துவமனையில் அவருடைய மனைவிக்கு சரியான உணவு மற்றும் தண்ணீர் கொடுக்கப்படவில்லை என்று எம்.எல்.ஏ குற்றம்சாட்டி வருகிறார்.
உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு நடைபெற்று வருகிறது. பாஜக அரசில் பாஜக எம்.எல்.ஏ-வின் மனைவிக்கே மருத்துவ சிகிச்சைக்கு படுக்கை கிடைக்கவில்லை. இந்தச் சூழலில் பொதுமக்களுக்கு எப்படி சிகிச்சைக்கு படுக்கை கிடைக்கும் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.