சேத்தன் சக்காரியாவின் தந்தை காஞ்சிபாய் சக்காரியா கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமானார். ஏற்கனவே தனது தம்பியை இழந்து சோகத்தில் இருந்த சக்காரியாவுக்கு தந்தையின் இழப்பு மேலும் ஒரு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
2021 ஐபிஎல் தொடரின் மிக சிறந்த இளம் வீரராக கண்டுகொள்ளப்படுபவர் சேத்தன் சக்காரியா. எப்படி கடந்து ஆண்டு ஐபிஎல் தொடரில் தமிழக வீரர் நடராஜன் வறுமையை வென்று தனது திறமையால் முன்னுக்கு வந்தாரோ, அதே போல் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய குடுமபத்தில் இருந்து பல தடைகளை கடந்து வந்தவர் சேத்தன் சக்காரியா. சேத்தன் சக்காரியாவின் தந்தை காஞ்சிபாய் சக்காரியா ஒரு டெம்போ ஓட்டுநர். கூலித்தொழில் செய்து வந்த ஒரு தம்பி, படித்துக்கொண்டிருந்த ஒரு தங்கை, ஒரே ஒரு அறையில் வாழும் குடும்ப நிலை, இப்படி இருக்க சூழல் ஆரம்ப காலகட்டத்தில் கிரிக்கெட் உனக்கு தேவைதானா? என்ற கேள்வியை சக்காரியா முன்னிலையில் எழுப்பியது. ஆனால் கிரிக்கெட்டின் மீது இருந்த ஆர்வம், அபரிதமான திறமை அவரை வழிநடத்தியது, சவுராஷ்டிரா கிரிக்கெட் அணிக்கு விளையாடும் வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுத்தது.
இந்நிலையில் சவுராஷ்டிரா அணிக்கு சயீத் முஸ்தாக் அலி டி20 தொடரில் விளையாடிய சேத்தன் சக்காரியா வெறும் 4.9 எகானாமியில், 12 விக்கெட்களை வீழ்த்தி அனைவர் பார்வையையும் தன் பக்கம் திருப்பினார்.. அவ்வளவுதான் ஐபிஎல் அணிகள் சக்காரியாவை ஏலத்தில் எடுக்க போட்டி போட்டனர், இறுதியாக ராஜஸ்தான் ராயல் அணி 1.2 கோடி ரூபாய்க்கு சக்காரியாவை ஏலம் எடுத்தது. ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக செயல்பட்ட இவர் 7 விக்கெட்களை வீழ்த்தினார். இப்படி சக்காரியாவின் கிரிக்கெட் பயணம் சிறப்பாக அமைந்தாலும் சொந்த வாழ்வில் பல சோதனைகள் அவரை துரத்திக்கொண்டே இருக்கிறது.
சயீத் முஸ்தாக் அலி டி20 தொடரில் சக்காரியா விளையாடி கொண்டிருந்தபோது, அவரது தம்பி ராகுல் தற்கொலை செய்து கொண்டார். இது தெரிந்தால் சக்காரியா உடைந்து விடுவார், அவர் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி சிறப்பாக விளையாட வேண்டும் என நினைத்த சக்காரியாவின் தாய், அந்த துக்க செய்தியை அவரிடமிருந்து மறைத்தார். பின்னர் உண்மை தெரிந்தபோது ஒரு வார காலம் சக்காரியா யாரிடமும் பேசவில்லை. இப்படி கடினமான மனநிலையுடன் கிரிக்கெட்டிற்கு மீண்டும் திரும்பி ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட சக்காரியா தற்போது தனது தந்தையையும் இழந்துள்ளார்.
ஐ.பிஎல் தொடரில் விளையாடிக்கொண்டிருக்கும் போதே காஞ்சிபாய் சக்காரியாவுக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் காஞ்சிபாய் சக்காரியா. ஐபிஎல் கைவிடப்பட்டதால் நேரடியாக வீட்டுக்கு திரும்பிய சக்காரியா தந்தைக்கு ஆதரவாக மருத்துவமனை சென்றுவந்து சிகிச்சையை கவனித்து வந்தார். அண்மையில் ஐ.பி.எல் தொடர் தேவையா என்ற சர்ச்சை எழுந்தபோது "என்னைப்போல் பலரை ஐபிஎல் தான் உருவாக்கியுள்ளது, அதன் மூலம் வந்த வருவாயில்தான் என்னுடைய குடும்பத்தை கவனித்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய அப்பாவுக்கு உயர்தர சிகிச்சைகளும் என்னால் வழங்க முடிகிறது" என தெரிவித்திருந்தார்..
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி காஞ்சிபாய் சக்கரியா உயிரிழந்தார். குறுகியகால கட்டத்தில் தந்தை, தம்பியை இழந்து கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார் சேத்தன் சக்கரியா.
இது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி "தொடர்ந்து சேத்தன் சக்கரியாவுடன் தொடர்பில் இருப்பதாகவும், இந்த கடினமான நேரத்தில் அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம்" என தெரிவித்துள்ளது.
மேலும் கிரிக்கெட் உலகை சேர்ந்த பலரும் தங்களது ஆதரவை சேத்தன் சக்காரியாவிற்கு தெரிவித்து வருகின்றனர். இந்த கடினமான காலத்தை கடந்து மீண்டும் அவர் களத்திற்கு விரைவில் திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு...