கொரோனா பெருந்தொற்று காலத்தில் திருமணங்கள் நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் நடைபெறுவது பெரும் சிக்கலாக அமைந்துள்ளது. ஏனென்றால், கொரோனா தொற்று பாதிப்பால் பல மாநிலங்களில் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு பெரியளவில் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை நடத்துவது பெரிய சவாலான சூழலாக அமைந்துள்ளது. 


அந்தவகையில் அண்மையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு திருமணம் கடைசி நேரத்தில் நடைபெற முடியாமல் போனது. அந்த சம்பவம் இரு வீட்டார் மற்றும் அந்த கிராம மக்களுடைய பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஹமிர்பூர் பகுதியைச் சேர்ந்தவர் தர்மேந்திரா. இவருக்கு கடந்த 25ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்து தீவிரமாக நடைபெற்று வந்துள்ளது. 


திருமண நாளான 25ஆம் தேதி காலை அனைத்து ஏற்பாடுகளும் செய்து தயார் நிலையில் மாப்பிள்ளை ஊர்வலம் நடைபெற இருந்தது. அந்த சமயத்தில் வந்த ஒரு செய்தி மணமகன் மற்றும் அவரது உறவினர்களுக்கு பெரிய இடியாக அமைந்தது. அப்போது தர்மேந்திராவின் கொரோனா பரிசோதனை முடிவு பாசிட்டிவ் என்று வந்துள்ளது. இதனை அந்த மாவட்ட சுகாதார அதிகாரிகள் கடைசி நேரத்தில் வந்து கொடுத்துள்ளனர். இதனால் திருமணம் பாதியில் நிறுத்தப்பட்டது. கடந்த 22ஆம் தேதி இரவு தர்மேந்திரா பாதுகாப்பிற்காக ஒரு கொரோனா பரிசோதனை எடுத்து கொண்டதாக கூறப்படுகிறது. அந்த பரிசோதனையின் முடிவு திருமணம் நடைபெறுவதற்கு முன்பாக கடைசி நேரத்தில் வந்துள்ளது. 




இதனைத் தொடர்ந்து தர்மேந்திரா மாவட்ட கொரோனா நோயாளிகள் தனிமைப்படுத்தப்படும் இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். மேலும் திருமணத்தில் பங்கேற்க வந்திருந்த அனைவருக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அத்துடன் அவர்கள் அனைவரையும் 10 நாட்கள் தனிமை படுத்தி கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கடைசி நேரத்தில் திருமணம் நின்றதால் இரு குடும்பத்தினர் மற்றும் பக்சா கிராம மக்களும் சோகத்தில் உள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து தர்மேந்திரா முழுவதும் மீண்டு வந்த பிறகு மீண்டும் திருமணம் மற்றொரு நாளில் நடத்தப்படும் என்று குடும்பத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஒருவருக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம் கடைசி நேரத்தில் நின்று போனால் அப்போது அவருக்கு ஏற்படும் வலி மிகவும் கொடுமையான ஒன்று தான். கொரோனா காலங்களில் பல இடங்களில் இந்த வகையில் திருமணங்கள் தடை பட்டு வருகின்றன. மேலும் ஒரு சில இடங்களில் எந்தவித கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் இல்லாமலும் திருமணங்கள் நடைபெற்றும் வருகின்றன. குறிப்பாக மதுரையை சேர்ந்த ஜோடி ஒன்று சமீபத்தில் விமானத்தில் திருமணம் செய்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த திருமணத்தில் யாரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றவில்லை என்ற புகார் எழுந்தது. ஆகவே இது போன்று கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாமல் யாரும் திருமணம் நடத்தாமல், அனைத்து விதிகளையும் பின்பற்றி பாதுகாப்பான முறையில் திருமணம் நடத்த வேண்டும் என்பதே அரசின் வேண்டுகோளாக உள்ளது.