Supreme Court Madarsa Act: உத்தரப்பிரதேச அரசு 2004-ல் கொண்டு வந்த மதரஸா கல்வி வாரிய சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது


மதரஸாக்கள் இயங்கலாம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு


உத்தரப்பிரதேசத்தில் உள்ள 16,000-க்கும் மேற்பட்ட மதரஸாக்களுக்கு பெரும் நிவாரணமாக, அவற்றின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்தும் 2004 சட்டத்தின் செல்லுபடியை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்தது. இந்தியத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்தது, அது சட்ட அரசியலமைப்புக்கு முரணானது மற்றும் மதச்சார்பின்மை கொள்கையை மீறுவதாக அறிவித்தது. மதரஸாக்களை கலைத்துவிட்டு, அங்கு பயிலும் மாணவர்களுக்கு முறையான பள்ளிக் கல்வி முறையில் இடமளிக்க வேண்டும் என்று மாநில அரசை உயர் நீதிமன்றம் வலியுறுத்தியது. இது சுமார் 17 லட்சம் மதரஸா மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியது. அந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பில் தவறு இருப்பதாக, உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


நீதிபதிகள் சொன்னது என்ன?


நீதிபதி ஜே.பி. பர்திவாலா மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, மதச்சார்பின்மை கொள்கையை மீறினால் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கூறியது தவறு என குறிப்பிட்டுள்ளது. மேலும், " மதரஸாக்களில் கல்வியின் தரத்தை aரசு ஒழுங்குபடுத்த முடியும், அதேநேரம் கல்வித் தரம் தொடர்பான விதிமுறைகள் மதரஸாக்களின் நிர்வாகத்தில் தலையிடாது" என்று தலைமை நீதிபதி கூறினார். மேலும்,  "குழந்தைகள் போதுமான கல்வியைப் பெறுவதை உறுதி செய்வதற்கான அரசின் நேர்மறையான கடமையுடன் உத்தரப்பிரதேச அரசு 2004-ல் கொண்டு வந்த மதரஸா கல்வி வாரிய சட்டம் ஒத்துப்போகிறது" என்று நீதிபதிகள் கூறினர்.


தலைமை நீதிபதி கருத்து:


மதரஸாக்களுக்கான சட்டம் சில மதப் பயிற்சிகளை உள்ளடக்கியதாலேயே அது அரசியலமைப்புக்கு முரணானது அல்ல என்று கூறிய தலைமை நீதிபதி,  இந்த சட்டம் ஃபாசில் மற்றும் கமில் பட்டங்களை வழங்குவதில் மட்டுமே அரசியலமைப்பிற்கு முரணானது என்றார். ஏனெனில் இந்த விதி யுஜிசி விதிமுறைகளை மீறுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தச் சட்டம், உத்தரப் பிரதேசத்தில் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், மாணவர்கள் தேர்ச்சி பெறுவதையும், ஒழுக்கமான வாழ்க்கையைப் பெறுவதையும் உறுதிசெய்யும் மாநிலத்தின் கடமைக்கு இணங்குவதாகவும் தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார்.


நடந்தது என்ன?


உத்தரபிரதேச மதரஸா கல்வி வாரிய சட்டம், 2004,  பின்னர் முலாயம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில்,  இந்த ஆண்டு தொடக்கத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் ஒரு ரிட் மனுவை விசாரித்த போது மதரஸா சட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று அறிவித்தது. அதன் மேல்முறையீட்டு மனுக்களின் விசாரணையின் முடிவில், மதரஸாக்களை கலைக்கு அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.