கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு


தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் நலத்திட்ட பணிகள் மக்களை முழுமையாக சென்றடைகிறதா? என மாவட்ட வாரியாக சென்று கள ஆய்வு செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இந்த கள ஆய்வுப்பணியை  இன்று கோவையில் இருந்து தொடங்குகிறார். இதற்காக கோவைக்கு வரும் அவர் இன்றும், நாளையும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.


குறைந்தது தங்கம் விலை


சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது. அதன்படி, ஆபரண தங்கத்தின் விலை 120 குறைந்து 58 ஆயிரத்து 840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 15 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 335 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து, 105 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


நெல்லையில் சிறுவன் மீது தாக்குதல்


நெல்லையில் பட்டியலின சிறுவன் மீது  வீடு புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக 4 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுவனை அரிவாளால் தாக்கிய சம்பவத்தில் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தன் மீது மோதும் நோக்கில் வேகமாக காரில் சென்றவர்களை கேள்வி கேட்டதால், சிறுவன் மீது தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.


பயன்பாட்டுக்கு வருகிறது முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம்


ரூ.42 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் சேகர்பாபு உறுதி அளித்துள்ளார். இங்கு 120 பேருந்துகள் ஒரே நேரத்தில் நின்று செல்லும் வகையில்,  ஓட்டுநர்கள், நடந்துனர்கள் தங்குவதற்காக 2 Dormitoryகள், உணவகங்கள் என அனைத்து நவீன வசதிகளும் இடம்பெற்றுள்ளன. இது திறக்கப்பட்டபின் கிளாம்பாக்கத்தில் சற்று நெரிசல் குறையும் எனவும் அமைச்சர் நம்பிக்கை.


98% ரூ.2000 நோட்டுகள் வங்கிக்கு திரும்பின - ஆர்பிஐ


கடந்த அக்.31ம் தேதி நிலவரப்படி 98% 2000 நோட்டுகள் வங்கிக்கு திரும்பின. இன்னும் ரூ.6,970 கோடி மதிப்பிலான (2%) ரூ.2000 நோட்டுகள் மட்டுமே வங்கிக்கு திரும்பவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


உலக அளவில் இந்துக்களை பாதுகாக்க வேண்டும் - பவன் கல்யாண்


கனடாவில் இந்து கோவில் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், கனடா அரசு உடனடியாக தீவிர நடவடிக்கையை எடுக்க வேண்டும். அங்குள்ள இந்து சமூகத்திற்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் அவசியம். உலக அளவில் இந்துக்களைப் பாதுகாக்க அவசர நடவடிக்கை வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு


அமெரிக்காவில் மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் இருந்து 538 பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. அதில் 270 உறுப்பினர்களின் ஆதரவை பெறும் வேட்பாளர் புதிய அதிபராக தேர்தெடுக்கப்பட உள்ளார். அப்படி தேர்தெடுக்கப்படும் அதிபர், வரும் ஜனவரி 20ம் தேதி வெள்ளை மாளிகையில் பதவியேற்பார். கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவுகிறது.


புகுஷிமா அணுமின் நிலையம் மீண்டும் மூடல்


ஜப்பானில் கடந்த 2011ம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் கடுமையாக சேதமடைந்த, புகுஷிமாவில் உள்ள அணுமின் நிலையம் பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த 29ம் தேதி திறக்கப்பட்டது. மின் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நியூட்ரான் தரவு தொடர்பான எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் அணு உலை மீண்டும் மூடப்பட்டுள்ளது.


ரோகித் சர்மா ஓய்வு பெறுவார் - ஸ்ரீகாந்த் கணிப்பு


நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வீரராகவும், கேப்டனாகவும் சரியாக செயல்படவில்லை என்பதை ஒப்புக்கொண்ட ரோகித்தை நாம் பாராட்ட வேண்டும். ஒருவேளை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக ஆடாவிட்டால் டெஸ்டிலும் ஓய்வு பெறுவார். ரோகித் இளம் வீரர் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் - முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்


பிசிசிஐ-யின் புதிய பொதுச்செயலாளர் யார்?


பிசிசிஐ-ன் புதிய செயலாளராக ரோகன் ஜெட்லி, தேர்வு செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா, முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாகூரின் தம்பி அருண் துமால் ஆகியோரை பின்னுக்கு தள்ளி,  அருண் ஜெட்லியின் மகன் ரோகன் ஜெட்லி தேர்வாகியுள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே, டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக உள்ளார்.