மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா இந்தியாவில் 12 கோடி பேருக்கும் அதிகமானோர் இன்னும் தங்கள் கோவிட் தடுப்பூசியின் இரண்டாம் தவணையைச் செலுத்திக் கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளார். 


தடுப்பூசி போட்டுக் கொள்வதற்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் மக்கள்தொகையில் இதுவரை 79 சதவிகித மக்கள் மட்டுமே முதல் தவணை தடுப்பூசியைச் செலுத்தியிருப்பதாகவும், 38 சதவிகிதம் மக்கள் மட்டுமே இரண்டாம் தவணை தடுப்பூசியைச் செலுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் மான்சுக் மாண்டவியா இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் அனைத்து மாநில அமைச்சர்களிடமும் தங்கள் மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முதல் தவணை தடுப்பூசியை மட்டுமாவது செலுத்தியிருப்பதை உறுதி செய்யுமாறும், முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்களை இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த ஊக்கப்படுத்துமாறும் கூறியுள்ளார். 



மான்சுக் மாண்டவியா


 


கிராமங்களில் மக்களைக் கூட்டி, கோவிட் தடுப்பூசியைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ள ஆலோசனைகளை முன்வைத்து பேசிய அமைச்சர் மான்சுக் மாண்டவியா இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இரு தவணை தடுப்பூசியையும் செலுத்துவதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் கூறினார். 


`நாம் நமது அனைத்து முயற்சிகளையும் செலுத்தி நாட்டின் எந்த ஒரு குடிமகனும் கோவிட் தடுப்பூசி தரும் `பாதுகாப்பு கவசத்தைப்’ பெறாமல் இருக்கக் கூடாது. நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தையும் எட்டி, பிரதமரின் கோவிட் தடுப்பூசி பிரசாரங்களின் அடிப்படையில் மக்களை ஊக்குவித்து இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்துமாறு செய்ய வேண்டும்’ என்றும் மான்சுக் மாண்டவியா கூறியுள்ளார். 


குறிப்பிட்ட பகுதிகளில் ஒரே நேரத்தில் பல்வேறு தடுப்பூசி செலுத்தும் பணியாளர்களுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மக்கள்தொகையை 100 சதவிகிதமாக உயர்த்துவதற்கான திட்டங்களை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்பதைக் கூறிய அமைச்சர் மான்சுக் மாண்டவியா, விழிப்புணர்வுக்காக அப்பகுதியில் உள்ள மதத் தலைவர்கள், சமூகத் தலைவர்கள் ஆகியோரின் உதவியையும் பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். 



மான்சுக் மாண்டவியா


 


கோவிட் தடுப்பூசிக்கு எதிராக முன்வைக்கப்படும் வதந்திகளைத் தவிர்க்க அதனை எதிர்த்து பிரசாரம் செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் மான்சுக் மாண்டவியா கூறியுள்ளார். மாற்றங்களை உருவாக்குவதற்கான விளம்பரங்களில் குழந்தைகள் பயன்படுத்தப்படுவது மக்களிடையே மனமாற்றத்தை உருவாக்கும் என்பதால் குழந்தைகளைப் பயன்படுத்தி பிரசாரம் மேற்கொள்ளுமாறும் அமைச்சர் மான்சுக் மாண்டவியா கூறியுள்ளார். 


`கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான நமது போர் முடிவடையவில்லை’ என்று கூறிய அமைச்சர் மான்சுக் மாண்டவியா தொடர்ந்து, `இந்தப் போரில் நம் ஆயுதங்கள் தடுப்பூசியும், கொரோனா பாதுகாப்பு நடைமுறைகள் மட்டுமே.. எனவே கொரோனா பெருந்தொற்று முழுமையாக முடியும் வரை அவற்றை நாம் கைவிடக் கூடாது’ என்று கூறி முடித்துக் கொண்டார்.