இந்தத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கும், சமாஜ்வாடி கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிற நிலையில் ஜனவரி 11 நேற்று யோகி ஆதித்யநாத்தின் அமைச்சரவையில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சராக இருந்த சுவாமி பிரசாத் மெளரியா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சமாஜ்வாடி கட்சியில் இணைந்திருக்கிறார். இதனை அடுத்து அவர் ராஜினாமா செய்த சில மணி நேரங்களிலேயே தின்ட்வாரி தொகுதி எம்எல்ஏ பிரஜேஷ் பிரஜாபதி, தில்கார் தொகுதி எம்எல்ஏ ரோஷன் லால் வர்மா, பிலாகர் தொகுதி பகவதி பிரசாத் சாகர் ஆகிய 3 எம்.எல்.ஏ-க்களும் பா.ஜ.க-விலிருந்து விலகி அகிலேஷ் யாதவின் சமாஜ் வாடி கட்சியில் இணைந்து விட்டனர். தேர்தல் நெருங்கி உள்ள இச்சுழலில் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் பதவி விலகி இருப்பது பாஜக- வுக்கு பேரடியாக உள்ளது.
இந்நிலையில் மௌரியாவுக்கு எதிராக உ.பி அரசு தரப்பில் கைது பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 2014 ஆம் ஆண்டு மௌரியா பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தார். அப்போது அவர் இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பேசியதாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 2017 தேர்தலின் போது தான் அவர் பாஜகவில் இணாந்தார். இப்போது மௌரியா பாஜக-வை விட்டு விலகியதால் அவர் மீது 2014 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது பிறப்பிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மௌரியா பா.ஜ.க தலைமைக்கு எழுதியிருக்கும் ராஜினாமா கடிதத்தில், “முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடர்ந்து பட்டியலின மக்களுக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்காததாலேயே பதவி விலகுகிறேன். மேலும், தற்போது அகிலேஷ் யாதவின் கட்சியில் இணைந்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “என்னுடைய இந்த முடிவு உத்தர பிரதேச தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பாஜக கட்சியினருக்கு நன்கு தெறியும்" என்றார்.
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சுவாமி பிரசாத் மெளரியா, பிற்படுத்தப்பட்ட (OBC) மக்களிடையே பெரும் மதிப்பு மிக்கவர். உ.பி -யில், சிறுபான்மை மக்களுக்காகக் குரல் கொடுத்தவர்களுள் இவரும் ஒருவர். இவர் 2017 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகி, பாஜக-வில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.