கடந்த 5-ம் தேதி பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக ஃபெரோஸ்ர் நகருக்குச் சென்றபோது விவசாயிகளின் போராட்டத்தால் மீண்டும் டெல்லி திரும்பினார். சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். "எந்தவொரு நாட்டின் பிரதமரின் பாதுகாப்பும் சமரசம் செய்யப்பட்டால், அந்த நாடு தன்னைத்தானே பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது. பஞ்சாப்பில் பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வலுவான வார்த்தைகளில் நான் கண்டிக்கிறேன்" என்று தனது ட்வீட்டில் சாய்னா தெரிவித்திருந்தார்.
சாய்னாவின் இந்தப் பதிவை டேக் செய்து நடிகர் சித்தார்த், "இறகுப்பந்து உலகின் சாம்பியன்... கடவுளுக்கு நன்றி. எங்களிடம் இந்தியாவின் பாதுகாவலர்கள் உள்ளனர்" என்று தெரிவித்தார். இறகுப்பந்து என்பதற்கு ஷட்டில்கார்க் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். அதனை நகைச்சுவையாக, கேலி செய்யும் விதமாக "சப்ட்டில் காக்(Subtle Cock)" என்று ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தார். காக் என்றால் ஆண்குறி என்று ஒரு அர்த்தம் ஆங்கிலத்தில் உள்ளது. ஆபாசமான வார்த்தைகள் கூறியதாக ட்விட்டரில் அவருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில் நேற்றிரவு டீவீட்டை நீக்கிவிட்டு, ஒரு மன்னிப்பு கடிதத்தை வெளியிட்டுள்ளார். அதில், "அன்புள்ள சாய்னா, நான் ட்வீட் செய்த நகைச்சுவைக்காக உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். நான் உங்களிடமிருந்து பல்வேறு கருத்துகளிலும் வேறுபட்டிருக்கலாம். உங்கள் ட்வீட்டைப் படித்தபோது எனக்கு கோபமும், ஏமாற்றமும் ஏற்பட்டிருக்கலாம். அதற்காக எனது வார்த்தைகளை நியாயப்படுத்த முடியாது. நான் இதைவிட இரக்கம் கொண்டவனே. நான் நகைச்சுவை என்று கருதி அந்த ட்வீட்டைப் பதிவிட்டிருந்தாலுமே, அது நல்ல நகைச்சுவை அல்ல. சரியான கருத்தைக் கொண்டு சேர்க்காத அந்த நகைச்சுவைக்காக வருந்துகிறேன். அதேவேளையில் நான் வார்த்தை விளையாட்டாக பதிந்த அந்த நகைச்சுவை, என்னைச் சாடுவோர் கூறுவதுபோல் இழிவான நோக்கம் கொண்டது அல்ல. நான் உண்மையிலேயே ஒரு திடமான பெண்ணியவாதி. ஒரு பெண் என்பதால் உங்களை விமர்சிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த ட்வீட்டை நான் பதிவு செய்யவில்லை. இந்தப் பிரச்சினையை நாம் முடித்துக் கொண்டு முன்னேறலாம் என நினைக்கிறேன். நீங்கள் எனது மன்னிப்புக் கடிதத்தை ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன். நீங்கள் எப்போதுமே எனது சாம்பியன் தான். நேர்மையுடன் சித்தார்த்!
சித்தார்த்தின் மன்னிப்பு கடிதத்தை ஏற்றுக்கொண்ட சாய்னா அது குறித்து பேசியுள்ளார். ''சித்தார்த் முதலில் என்னைப் பற்றி ஏதோ சொன்னார், பிறகு மன்னிப்பு கேட்டார். அது ஏன் இவ்வளவு வைரலானது என்று கூட தெரியவில்லை. ட்விட்டரில் நானே டிரெண்டாகி வருவதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். சித்தார்த் மன்னிப்பு கேட்டதில் மகிழ்ச்சி. அப்படி ஒரு பெண்ணை குறிவைக்கக் கூடாது. பரவாயில்லை. நான் அதைப் பற்றி கவலைப்படவில்லை. நான் என் இடத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். கடவுள் ஆசீர்வதிக்கட்டும்'' எனத் தெரிவித்துள்ளார்