உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக, சமாஜ்வாடி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் என நான்கு பெரிய கட்சிகள் மோத உள்ளது. ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள யோகி ஆதித்யநாத் தயராகி வருகிறார். மறு புறம் மீண்டும் ஆட்சியை பிடிக்க அகிலேஷ் யாதவ் மும்முரமாக செயல்பட்டு வருகிறார்.



ஜனவரி 11 நேற்று யோகி ஆதித்யநாத்தின் அமைச்சரவையில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சராக இருந்த சுவாமி பிரசாத் மெளரியா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சமாஜ்வாடி கட்சியில் இணைந்திருக்கிறார். இதனை அடுத்து அவர் ராஜினாமா செய்த சில மணி நேரங்களிலேயே தின்ட்வாரி தொகுதி எம்எல்ஏ பிரஜேஷ் பிரஜாபதி, தில்கார் தொகுதி எம்எல்ஏ ரோஷன் லால் வர்மா, பிலாகர் தொகுதி பகவதி பிரசாத் சாகர் ஆகிய 3 எம்.எல்.ஏ-க்களும் பா.ஜ.க-விலிருந்து விலகி அகிலேஷ் யாதவின் சமாஜ் வாடி கட்சியில் இணைந்து விட்டனர். தேர்தல் நெருங்கி உள்ள இச்சுழலில் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் பதவி விலகி இருப்பது பாஜக- வுக்கு பேரடியாக உள்ளது.


பிரசாத் மவுரியா பா.ஜ.க தலைமைக்கு எழுதியிருக்கும் ராஜினாமா கடிதத்தில், “முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடர்ந்து பட்டியலின மக்களுக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்காததாலேயே பதவி விலகுகிறேன். மேலும், தற்போது அகிலேஷ் யாதவின் கட்சியில் இணைந்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “என்னுடைய இந்த முடிவு உததர பிரதேச தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பாஜக கட்சியினருக்கு நன்கு தெறியும்" என்றார்.






இந்நிலையில் மேலும் ஒரு அமைச்சர் தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். யோகி அமைச்சரவையில் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்து வந்த தாரா சிங் சவுகான் இன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


அவரது ராஜினாமா கடிதத்தில் “நான் அர்ப்பணிப்புடன் உழைத்தேன், ஆனால் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட பிரிவினர், தலித்துகள், விவசாயிகள், வேலையில்லாத இளைஞர்கள் மீதான அடக்குமுறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகளுக்கான இடஒதுக்கீட்டடை புறக்கணித்ததால் பதவி விலகுகிறேன்.” என தெரிவித்துள்ளார்.


 






அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சுவாமி பிரசாத் மெளரியா, பிற்படுத்தப்பட்ட (OBC) மக்களிடையே பெரும் மதிப்பு மிக்கவர். உ.பி -யில், சிறுபான்மை மக்களுக்காகக் குரல் கொடுத்தவர்களுள் இவரும் ஒருவர். இவர் 2017 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகி, பாஜக-வில் இணைந்தார்.


உத்தர பிரதேசத்தில் கடந்த 48 மணி நேரத்தில் 2 அமைச்சர்கள் மற்றும் 3 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இருந்து விலகி இருப்பது அக்கட்சிக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.