உத்தரப்பிரதேச தேர்தலில் யோகிக்கு வாக்களியுங்கள் இல்லையென்றால் புல்டோசர் அனுப்பி வீடுகளை இடிப்போம் என பேசிய தெலுங்கானா பாஜக எம்எல்ஏ தாக்கூர் ராஜா மீது அம்மாநிலக் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது
ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் உத்தர பிரதேசத்தில் மூன்றாவது கட்டமாக 59 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும், எஞ்சிய கட்ட தேர்தல் நடைபெறவுள்ள பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள கோசமகால் சட்டமன்ற தொகுதியின் பாஜக எம்.எல்.ஏவான ராஜா சிங் பேசிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பேசும் பொருளானது. அவர், அந்த வீடியோவில் இந்து வாக்காளர்கள் அனைவரும் இந்த தேர்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டும். பாஜகவை புறக்கணிக்கும் வாக்களர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். யோகியிடம் ஆயிரக்கணக்கான ஜேசிபிகள், புல்டோசர்கள் உள்ளன. ஜேசிபி, புல்டோசர்கள் எதற்காக பயன்படும் என்று உங்களுக்குத் தெரியும் என நம்புகிறேன். நீங்கள் உ.பி.யில் வாழ வேண்டும் என்றால், யோகி-யோகி என்று கோஷமிடுங்கள். இல்லையேல், உத்தரப்பிரதேசத்தை விட்டு வெளியேற நேரிடும்" என்று கூறினார்.
இதனையடுத்து, உத்தரப்பிரதேச மக்களை மிரட்டியதாக கூறி இந்தியத் தேர்தல் ஆணையம் இவருக்கு, கடந்த 16ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. அதில், தேர்தல் நடத்தை விதிகள், இந்திய தண்டனைச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் ஆகியவற்றை மீறும் வகையில் உங்கள் செயல்பாடு அமைந்துள்ளது. இது, குறித்து பதிலளிக்க 24 மணிநேரம் அவகாசம் தரப்படுகிறது. உரிய பதிலளிக்காவிட்டால் சட்ட விதிமுறைகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்ற தெரிவித்தது.
தேர்தல் ஆணையம் அளித்த நோட்டிசுக்கு எம்எல்ஏ தாக்கூர் ராஜா முறையான பதில் எதுவும் சமர்பிக்கவில்லை. இதனையடுத்து, சர்ச்சைக்குரிய வகையில் பேசிதற்காக 72 மணி நேரம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. சனிக்கிழமை மாலை 6 மணி முதல் அடுத்த 72 மணிநேரத்திற்கு பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், பேரணிகள், நேர்காணல்கள், ஊடகங்களில் பகிரங்கமாக பேசுதல் உள்ளிட்டவர்களுக்கு தடை விதிப்பதாக ஆணையம் தனது உத்தரவில் தெரிவித்தது.
மேலும், இவர் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு தெலுங்கான தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், ஓட்டு போட்றீங்களா? புல்டோசர் அனுப்பனுமா? : வீடுகளை இடிப்போம் என பேசிய எம்.எல்.ஏ மீது ஹைதராபாத் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
யோகி- புல்டோசர்: யோகி புல்டோசர் பயன்படுத்தினார்/ இனியும் பயன்படுத்துவார் என்ற கருத்தை பல்வேறு பாஜக அரசியல் தலைவர்களும் கூறி வருகின்றனர். 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் புல்டோசர் பரப்புரை அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
முந்தைய ஆட்சிகளில் மாஃபியா சுதந்திரமாக செயல்பட்டதாகவும், யோகியின் புல்டோசரை எதிர்கொண்டபோதுதான் அவர்கள் கதறத் தொடங்கினர் என்ற கருத்தை பல்வேறு மேடைகளில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் கூறிவருகின்றனர்.
உதாரணமாக,2021 டிசம்பர் 21 அன்று உ.பி. பல்ராம்பூரில் சரயு கால்வாய் தேசியத் திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய மோடி, "முன்பு வலுத்தவர்கள் வளர்ச்சியடைந்தனர். மாஃபியாக்கள் சட்ட விரோத ஆக்கிரமிப்பில் ஈடுபட்டனர், இன்று அந்த ஆக்கிரமிப்புகளை யோகி புல்டோசர் கொண்டு அகற்றியுள்ளார். அதனால்தான் வேறுபாடு கண்கூடாகத் தெரிகிறது என்று உ.பி மக்கள் கூறுகின்றனர்" என்று தெரிவித்தார்.