நாட்டின் அதிகப்படியான பொருளாதார முன்னேற்றம், கல்வியறிவு,செல்வவளம் மிகுந்த மாநிலமாக உத்தரபிரதேசத்தை மாற்றியமைக்க பாஜக முயற்சிவருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் உத்தர பிரதேசத்தில் மூன்றாவது கட்டமாக 59 தொகுதிகளுக்கு இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் அக்கட்சியின் மூத்தத் தலைவர் சிவபால் யாதவ் ஆகியோர் களத்தில் உள்ளனர். அகிலேஷ் யாதவை எதிர்த்து, பாஜக வேட்பாளராக மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் சத்யபால் சிங் பாகேல் நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாராம் தீவிரமடைந்துள்ளது. நேற்று, லக்னோவில், தேர்தல் பரப்புரை செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, " பாஜக மத்தியிலும், மாநிலத்திலும் ஊழலற்ற ஆட்சி நிர்வாகத்தை உறுதி செய்துள்ளது. 2014ல் இருந்து பல்வேறு நலத்திட்டங்களில் மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. ஆனால், உத்தர பிரதேசத்தில் 2017க்கு முன்பு வரை ஆட்சியிலிருந்த அகிலேஷ் யாதவ் அரசு, தனது நண்பர்களுக்கும், தனது கட்சித் தலைவர்களுக்கும் மட்டுமே பல நன்மைகளை அளித்தது. அந்த பாரப்பட்சத்தினால் தான் , இம்மாநிலம் பல பிரச்சனைகளை சந்தித்தது.
" சமூகத் திறன்கள், உணர்திறன் கொண்ட மனிதர்களாக இருக்க அரசியலமைப்பு நமக்கு கற்றுக்கொடுக்கிறது. அரசாங்கம் என்பது ஏழைகள் மற்றும் அடித்தள மக்களுக்குக்கானதாக இருக்க வேண்டும். அதன் அடிப்படையில் தான் வளர்ச்சிப் பணிகள் இருக்க வேண்டும். விருப்பு, வெறுப்பு மற்றும் தங்கள் சாதியைச் சேர்ந்தவர்க்கென தனிச் சலுகை காட்டுதல் கூடாது" என்று தெரிவித்தார்.
மேலும், ஏழைமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவத்த அவர், "கொள்கைகளுக்குப் பதில் குடும்ப அரசியலின் பின்னணியில் அரசாங்கத்தை நடத்தும்போது தான் குறிப்பிட்ட சாதி மற்றும் மதத்தின் நலனில் பாரப்பட்சம் வருகிறது. வாரிசு அரசியல், நாட்டை முன்னேற்றாமல், தன்னையும் குடும்பத்தையும்தான் வளர்க்கிறது. வாக்கு வங்கி அரசியலை அடிப்படையாகக் கொண்டு காட்டப்படும் சில பாகுபாடுகள் (Appeasement ) சமூகத்தின் அனைத்து மக்களையும் பாதிப்படைய செய்கிறது என்றும் தெரிவித்தார்.