நாடு முழுவதும் உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக, பலமுனை போட்டி நிலவும் மாநிலங்களான பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசத்தில் (இன்று) ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெற்று வருகிறது. 


பஞ்சாபில் மொத்தமுள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாகவும், உத்தரப் பிரதேசத்தில் 3 ம் கட்டமாக 59 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.


பஞ்சாப் தேர்தல் 2022 :


பஞ்சாப் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவானது காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். இந்த தேர்தலில் 2.14 கோடி பேர் வாக்களிக்க உள்ள நிலையில், 93 பெண்கள் உட்பட 1,304  பேர் வேட்பாளராக களத்தில் உள்ளனர். இந்த தேர்தலுக்கான வாக்குகள் வரும் மார்ச் 10-ந் தேதி எண்ணப்பட உள்ளது.


காங்கிரஸ், ஆம் ஆத்மி, எஸ்ஏடி-பிஎஸ்பி கூட்டணி, பிஜேபி-பிஎல்சி-எஸ்ஏடி (சன்யுக்த்) கூட்டணி மற்றும் பல்வேறு விவசாய அமைப்புகளின் அரசியல் முன்னணியான சன்யுக்த் சமாஜ் மோர்ச்சா ஆகிய கட்சிகளிடையே பலமுனை போட்டி நிலவி வருகிறது. 


போதைப்பொருள் ஒழிப்பு, வேலைவாய்ப்பு, ஊழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஆளும் காங்கிரஸ் மீது எதிர்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.ஆனால். தற்போதைய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் 111 நாள் பதவிக் காலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் காங்கிரஸ் வாக்குகளை பொதுமக்களிடம் கேட்டு வருகிறது. இவரது ஆட்சியின்கீழ் மின்சாரக் கட்டணம், எரிபொருள் விலை குறைப்பு குறிப்பிடத்தக்கது. 


பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தவரை தற்போது ஆம் ஆத்மி கட்சி முக்கிய போட்டியாளராக உருவெடுத்து வருகிறது. டெல்லியில் ஆட்சி அமைத்திற்கும் ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் களமிறங்கியுள்ளது. அதேபோல், பகுஜன் சமாஜ் கட்சியுடன் (பிஎஸ்பி) கூட்டணியில் போட்டியிடும் சிரோமணி அகாலி தளம், 2017ல் படுதோல்வியை சந்தித்தநிலையில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் உள்ளது.


சரண்ஜித்சிங் சன்னி :


 பஞ்சாப் காங்கிரசில் அந்த மாநில முன்னாள் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் விலகியதற்கு பிறகு, பஞ்சாப் முதல்வராக சரண்ஜித்சிங் சன்னி பொறுப்பேற்றார். பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத்சிங் சித்து முதல்வர் வேட்பாளராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சரண்ஜித்சிங் சன்னியையே முதல்வர் வேட்பாளராக ராகுல்காந்தி அறிவித்தார்.


சரண்ஜித்சிங் சன்னியை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பஞ்சாபில் உள்ள குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1,100 வழங்குவதாக அறிவித்துள்ளனர். மேலும், பஞ்சாபில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றினால் ஆண்டுதோறும் எட்டு இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண