உத்தரப்பிரதேச மாநில தேர்தல் பிரச்சார மேடையில் பிரதமர் நரேந்திர மோடியின் கால்களை தொட்டு வணங்கிய பட்டியலினத்தை சேர்ந்த தலைவரை, வேண்டாம் என்று கூறிய பிரதமர், அவரது காலில் பதிலுக்கு விழுந்த வீடியோ வைரலாகி வருகின்றது.


பாஜக உன்னாவ் மாவட்டத் தலைவர் அவதேஷ் கட்டியார் மேடையில் ஏறி, பிரதமர் மோடிக்கு ராமர் சிலையை பரிசளித்தபோது, பிரதமர் மோடியின் பாதத்தைத் தொட்டு வணங்கினார். ஆனால், பிரதமர் மோடி அவரை நடுவழியில் தடுத்து நிறுத்தி, ஆள்காட்டி விரலால் வேண்டாம் எனக் கூறினார். பாஜக தலைவரின் கையைப் பிடித்த பிரதமர் மோடி, அவரது கால்களைத் தொடக்கூடாது என்று மீண்டும் கூறினார். பின்னர் பிரதமர் கட்டியாரின் பாதங்களைத் தொட்டுக் குனிந்து நன்றியுடன் கைகளைக் கூப்பினார்.  இந்த நிகழ்வை பாஜகவினர் நேரலையில் ஒளிபரப்பினர். அப்போது, இந்த வீடியோவில் இது சிக்கியது. இந்த வீடியோவை பாஜகவினர் ஷேர் செய்து வருவதால் தற்போது அது வைரலாகி வருகின்றது.


வீடியோ:


 






கடந்த ஆண்டு செப்டம்பரில் பாஜகவால் உன்னாவ் மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்ட அவதேஷ் கட்டியார், முன்பு உன்னாவ் மாவட்ட பாஜக பொதுச் செயலாளராக இருந்தார்.


உன்னாவ் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் பிப்ரவரி 23ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தில் நான்காம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக உன்னாவ் நகரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை கடுமையாக விமர்சித்தார். "மேடையில் இருந்து தள்ளப்பட்ட தந்தை (முலாயம் சிங் யாதவ்) அவமானப்படுத்தப்பட்டு கட்சி கைப்பற்றப்பட்டதை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். அகிலேஷ் இருக்கையை காப்பாற்றுவதற்காக முலாயமிடம் கெஞ்ச வேண்டும்” என்று பிரதமர் மோடி கூறினார். 


உத்தரபிரதேசத்தின் 403 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது, மார்ச் 7ஆம் தேதி கடைசி கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி நடைபெறும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண