IAS Officer Bisleri: மாவட்ட ஆட்சியரின் ஆலோசனைக் கூட்டத்தில் வைக்கப்பட்ட வாட்டர் பாட்டிலால் போலி ஆலை சிக்கியுள்ளது.
காவல் நிலையத்தில் வாட்டர் பாட்டில்:
உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்ட மாஜிஸ்திரேட், ஜிதேந்திர பிரதாப் சிங், உள்ளூர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ள சென்றிருந்தார். அப்போது அவருக்கு 500 மில்லி லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு வாட்டர் பாட்டில் வழங்கப்பட்டுள்ளது. அதில் பிரபலமான ”பிஸ்லெரி” நிறுவனத்தின் ஸ்டிக்கர் வடிவமைப்பு பாணியிலேடே 'பில்செரி' என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அந்த பாட்டிலை ஆய்வு செய்தபோது, அது போலியானது என தெரியவந்தது. மேலும், தண்ணீரின் தூய்மைத்தன்மையை ஆராயும்படி உணவு பாதுகாப்பு துறைக்கு அவர் உத்தரவிட்டார்.
சிக்கிய போலி ஆலை:
கௌரிபூர் ஜவஹர்நகர் கிராமத்தில் உள்ள ஒரு கடையில் இருந்து தண்ணீர் பாட்டில்களை வாங்கியதாக, காவல் துறை அதிகாரிகள் உதவி உணவு பாதுகாப்பு ஆணையர் மன்வேந்திர சிங்கிடம் தெரிவித்தனர். விசாரணையில், கவுரிபூர் ஜவஹர் நகரை சேர்ந்த கஜே சிங்கின் மகன் பீம் சிங், மாவட்டத்தில் உள்ள மற்ற கடைகளுக்கு போலி பிராண்டு தண்ணீர் பாட்டில்களை சப்ளை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் தனது வீட்டில் உரிமம் இல்லாமல் தண்ணீர் பாட்டில்கள் கிடங்கு அமைத்திருந்ததும் தெரிய வந்தது.
அழிக்கப்பட்ட வாட்டர் பாட்டில்கள்:
உதவி உணவு பாதுகாப்பு ஆணையர் மன்வேந்திர சிங் சம்பவ இடத்திலேயே 2,600 தண்ணீர் பாட்டில்களை கைப்பற்றி, தண்ணீர் மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தார். புல்டோசர் மூலம் 2,663 பாட்டில்கள் உடனடியாக அழிக்கப்பட்டன.
உடனடியாக அமலுக்கு வரும் வகையில் கிடங்கு சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட பீம் சிங்கிடம் விசாரணை நடத்தியபோது, ஹரியானாவில் இருந்து பாக்பத் மாவட்டத்தில் உள்ள மற்ற கடைகளுக்கு போலி பிராண்ட் தண்ணீர் பாட்டில்கள் சப்ளை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து, குழு அமைத்து தேவையான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். போலியான உணவுகள் மற்றும் பானங்களை அசல் பிராண்டின் பெயரில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யக்கூடாது என்றும், யாரேனும் அவற்றை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
உணவுப் பொருட்களை உட்கொள்வதற்கு முன், பிராண்ட் லேபிளை கவனமாகச் சரிபார்த்து, உற்பத்தி மற்றும் காலாவதி தேதிகளைப் பார்க்குமாறு மாவட்ட ஆட்சியர் மக்களை வலியுறுத்தினார். பிரபலமான நிறுவனங்களின் பெயரில் போலிக்களை உருவாக்கி, மலிவு விலையில் சந்தைப்படுத்துவது அதிகரித்து வரும் சூழலில், ஐஏஎஸ் அதிகாரியின் இந்த நடவடிக்கை கவனம் ஈர்த்துள்ளது.