பிரதமரின் விவசாயிகள் கவுரவிப்பு நிதி (பிஎம் கிசான் நிதி) திட்டத்தின் 18வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று (அக்டோபர் 5) வெளியிட்டார். மகாராஷ்டிராவின் வாஷிமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாடு முழுவதும் 9.4 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் எந்தவொரு இடைத்தரகரின் தலையீடும் இல்லாமல் நேரடிப் பயன் பரிமாற்றம் (டிபிடி) மூலம் ரூ. 20,000 கோடிக்கும் அதிகமான நிதிப் பலன்களைப் பெற்றனர்.
18-வது தவணை வெளியீட்டின் மூலம், திட்டத்தின் கீழ் மொத்தப் பட்டுவாடா ரூ.3.45 லட்சம் கோடியைத் தாண்டும். இது நாடு முழுவதும் 11 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதோடு கிராமப்புற வளர்ச்சி மற்றும் விவசாய செழிப்புக்கான அரசின் உறுதிப்பாட்டை மேலும் உறுதிப்படுத்துகிறது.
பிஎம் கிசான் நிதித் திட்டத்தின் பின்னணி:
2019, பிப்ரவரி 2 அன்று தொடங்கப்பட்ட பிரதமரின் விவசாயிகள் கவுரவிப்பு நிதி (பிஎம் கிசான்), இந்தியாவின் வேளாண் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக மாறியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு தகுதியான விவசாய குடும்பமும் ரூ. 6,000 வருடாந்திர நன்மையைப் பெறுகின்றன.
இது ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் ரூ.2,000 வீதம் மூன்று சம தவணைகளில் விநியோகிக்கப்படுகிறது. இந்த தொகை நேரடி பயன் பரிமாற்ற (டிபிடி) நடைமுறையின் மூலம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக மாற்றப்படுகிறது.
இது உலக அளவில் மிகப்பெரிய, மிகவும் வெளிப்படையான நேரடி பயன் பரிமாற்ற திட்டங்களில் ஒன்றாகும். எளிதான அணுகல் மற்றும் குறைகளை நிவர்த்தி செய்தல்: விவசாயிகள் இப்போது குறைகளை பதிவு செய்யலாம் அல்லது பிஎம் கிசான் போர்ட்டல் மூலம் நேரடியாக உதவி பெறலாம். மிகவும் தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்திற்கு, அவர்கள் தங்கள் பிரச்சினைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய 24 மணி நேர உதவி எண்ணையும் பயன்படுத்தலாம்.
கிசான் இ-மித்ரா:
இந்தத் திட்டத்தின் கீழ் கிசான் இ-மித்ரா என்பது குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பாகும். இது குரல் அடிப்படையிலான செயற்கை நுண்ணறிவு சாட்போட் ஆகும். இந்த தளம் விவசாயிகள் கேள்விகளை எழுப்பவும், தங்கள் சொந்த மொழியில் நிகழ்நேர தீர்வுகளைப் பெறவும் அனுமதிக்கிறது.
தற்போது, இது இந்தி, ஆங்கிலம், ஒடியா, தமிழ், பெங்காலி, மலையாளம், குஜராத்தி, பஞ்சாபி, கன்னடம், தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட 11 மொழிகளை ஏற்கிறது. பொதுச் சேவை மையங்கள் மற்றும் இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியுடன் வீட்டு வாசலில் சேவைகள்: இந்தத் திட்டத்தை மேலும் எளிதாக அணுகும் வகையில், நாடு முழுவதும் 5 லட்சத்துக்கும் அதிகமான பொதுச் சேவை மையங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த பொதுச் சேவை மையங்கள் திட்டத்தின் சேவைகளை நேரடியாக விவசாயிகளின் வீட்டு வாசல்களுக்கு கொண்டு வருகின்றன, இதனால் அவர்கள் பதிவு செய்வது, அவர்களின் விவரங்களைப் புதுப்பிப்பது அல்லது உதவி பெறுவதை எளிதாக்குகிறது.