இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக டெல்லி காவல்துறை நேற்று முன்தினம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகார்களுக்கு வலு சேர்க்கும் விதமாக 25 சாட்சியங்களின் வாக்குமூலம் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றது.


குற்றப்பத்திரிகை தாக்கல்:


இந்திய தண்டனைச் சட்டம் 354, 354A, 354D ஆகிய பிரிவுகளில் கீழ் பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக டெல்லி காவல்துறை விசாரிக்க தொடங்கி ஒரு மாதத்திற்கு மேல் ஆன நிலையில், குற்றப்பத்திரிகை சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 


நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா, வினேஷ் போகட் மற்றும் சாக்ஷி மாலிக் ஆகியோர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். ஆனால், மத்திய அரசு அளித்த உத்தரவாதத்தை தொடர்ந்து, போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.


பாஜக எம்பியை காப்பாற்ற முயற்சியா? 


குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட போதிலும், பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்யாமல் இருப்பது குறித்து பல்வேறு தரப்பினர் சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர். இந்நிலையில், உத்தர பிரதேச துணை முதலமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கேசவ் பிரசாத் மவுரியாவிடம் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "மல்யுத்த வீரர்களை பாஜக மதிக்கிறது. யாரும் பாதுகாக்கப்படுவதில்லை" என்றார்.


தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் பேசிய அவர், "அமைதியாக இருக்கிறோம் என்று சொல்வது சரியல்ல. முறையற்ற எதையும் பேசக்கூடாது. முறையற்ற எதையும் பேசாமல் மௌனம் காப்பதை தவறாகக் கருதக்கூடாது. மல்யுத்த வீரர்களின் புகார்கள் மீது விளையாட்டுக் குழு மற்றும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றார்.


ஆறு மல்யுத்த வீராங்கனைகளின் புகாரின் அடிப்படையில் ஒரு வழக்கும் மைனர் மல்யுத்த வீராங்கனையின் தந்தை அளித்த புகாரின் பேரில்
போக்சோ வழக்கும் பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக பதிவு செய்யப்பட்டது. ஆனால், மைனர் மல்யுத்த வீராங்கனை, தான் அளித்த பாலியல் துன்புறுத்தல் புகாரை திரும்ப பெற்றதால், போக்சோ வழக்கு ரத்து செய்யப்பட்டு குற்றிப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.


இந்த வழக்கை, 10 காவல்துறை அதிகாரிகள் கொண்ட ஆழு குழுக்கள் விசாரித்தன. இந்த வழக்கில் மொத்தம் 125 சாட்சிகள் தங்கள் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 25 சாட்சிகள் சிங்குக்கு எதிராக வாக்குமூலம் அளித்துள்ளனர். விசாரணையின் போது புகார்தாரர்கள் மற்றும் சிங் ஆகியோரின் சாட்கள் மற்றும் குறுஞ்செய்திகள் ஆய்வு செய்யப்பட்டன.