உத்தரப்பிரதேசத்தில் பட்டியலினப் பெண்ணின் உடல் சாக்கு மூட்டையில் கண்டெடுக்கப்பட்டது. இவர் பாஜகவை ஆதரித்ததற்காக கொல்லப்பட்டதாக குடும்பத்தினர் குற்றசாட்டை முன்வைத்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தின் கர்ஹால் தொகுதியில் இன்று காலை 23 வயது பட்டியலினப் பெண்ணின் சடலம் சாக்கு மூட்டையில் கண்டெடுக்கப்பட்டது அரசியல் புயலை கிளப்பியுள்ளது. இன்று நடைபெறும் இடைத்தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று உள்ளூர் சமாஜ்வாதி கட்சிக்காரர் அப்பெண்ணை வற்புறுத்தியதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
தகவலறிந்து வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக பிரசாந்த் யாதவ் மற்றும் மோகன் கத்தேரியா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து மெயின்புரி மாவட்ட காவல்துறைத் தலைவர் வினோத் குமார் கூறுகையில், “பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என என் மகள் நினைத்ததால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவரைக் கொன்றுள்ள்னர் என அந்தப் பெண்ணின் பெற்றோர் கூறியுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
மூன்று நாட்களுக்கு முன்பு பிரசாந்த் யாதவ் அவர்கள் வீட்டிற்கு வந்து எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்று கேட்டதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை குற்றம் சாட்டினார். பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தனது குடும்பத்திற்கு வீடு கிடைத்ததால், பாஜகவின் சின்னமான தாமரைக்கு வாக்களிப்பேன் என்று அவர் பதிலளித்தார். பின்னர் யாதவ் அவரை மிரட்டி, சமாஜ்வாதி கட்சியின் தேர்தல் சின்னமான ‘சைக்கிளுக்கு’ வாக்களிக்கச் சொன்னார் என்று அந்தப் பெண்ணின் தந்தை குற்றம் சாட்டினார்.
பெண்ணின் மரணம் தொடர்பாக சமாஜ்வாதி கட்சி மீது பாஜக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. "மைன்புரி மாவட்டத்தில் உள்ள கர்ஹாலில், சமாஜ்வாதி கட்சியின் பிரசாந்த் யாதவ் மற்றும் அவரது உதவியாளர்கள் ஒரு தலித் மகள் 'சைக்கிளுக்கு' வாக்களிக்க மறுத்ததால் கொடூரமாக கொலை செய்தனர்" என்று மாநில பாஜக தலைவர் பூபேந்திர சிங் சவுத்ரி X-ல் பதிவிட்டுள்ளார்.
சமாஜ்வாதி கட்சியின் கர்ஹால் வேட்பாளர் தேஜ் பிரதாப் யாதவ், முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும், குற்றவாளிகள் கடுமையான தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் என்றார். இதைத்தொடர்ந்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி பிடிஐயிடம் கூறுகையில், "இதுபோன்ற செயல்களில் அடிக்கடி ஈடுபடும் சமாஜ்வாடி கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் சதி இது. இதற்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்றார்.