பரபரப்பான உத்தரப்பிரதேச அரசியலின் முக்கிய நிகழ்வாக, தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை உத்தரப்பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத் இன்று சந்தித்தார். லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. 


சந்திப்புக்குப் பின்னர் ஆதித்யநாத் தன் ட்விட்டர் பக்கத்தில், தகவலிட்டுள்ளார். இந்தியில் வெளியிடப்பட்ட அந்த இடுகையில், “ பிரதமர் நரேந்திர மோடி அவர்களை மரியாதை நிமித்தம் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு வாய்த்தது. அவரிடமிருந்து எனக்கு வழிகாட்டல் கிடைத்தது. அவருடைய மும்முரமான வேலைகளுக்கு இடையே என்னைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கியமைக்காகவும் எனக்கு வழிகாட்டல் அளித்தமைக்காகவும் இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத் குறிப்பிட்டுள்ளார். 


பிரதமரைச் சந்தித்த கையோடு, பா.ஜ.க.வின் அகில இந்தியத் தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்துப் பேசினார், ஆதித்யநாத். முன்னதாக, நேற்று பா.ஜ.க.வின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை, அவர் சந்தித்துப் பேசினார். அப்போதும் இதே பாணியில்தான், ஆதித்யநாத் ட்விட்டர் தகவல் இட்டிருந்தார். “ மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களை டெல்லியில் இன்று சந்தித்தேன்; அவரிடமிருந்து வழிகாட்டல் கிடைத்தது. சந்திப்புக்கு அவரின் மதிப்புமிக நேரம் ஒதுக்கியமைக்காக உள்துறை அமைச்சருக்கு நன்றி.“ என அமைந்திருந்தது, நேற்றைய ட்வீட்.


 இந்த இரண்டு சந்திப்புகளுக்கும் இடையே, வேறு ஒரு முக்கிய சந்திப்பும் நடைபெற்றது. கடந்த புதன்கிழமைவரை உத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய காங்கிரஸ் புள்ளியாக இருந்தவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜிதின் பிரசாதா, பா.ஜ.க.வில் ஐக்கியம் ஆனார். நேற்று ஆதித்யநாத்தின் சந்திப்புக்குப் பின்னர், அவரும் அமித்ஷாவை ’மரியாதை நிமித்தமாக’ சந்தித்துப் பேசினார். 




இது மாதிரியான திடீர் சந்திப்புகள், கட்சித்தாவல் சேர்க்கைகள் பா.ஜ.க.வுக்குப் புதியது அல்ல. மிக அண்மையில் மேற்குவங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்த அத்துணை நிர்வாகிகளையும் அள்ளிப்போட்டுக்கொண்டதைப் போல பா.ஜ.க.வில் சேர்த்துக்கொண்டது, நினைவிருக்கும்.  அதைப் போலவே, உத்தரப்பிரதேசத்திலும் அடுத்த ஆண்டு முதல் ஆறு மாதங்களுக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. எப்படியாவது மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற முனைப்பில் பா.ஜ.க. தலைமை வேலைகளை முடுக்கிவிட்டு இருக்கிறது.


இதையொட்டி, கடந்த இரண்டு வாரங்களாக உ.பி. தலைநகர் லக்னோவிலும் டெல்லியிலுமாக பா.ஜ.க. மற்றும் சங்பரிவார் அமைப்புகளின் நிர்வாகிகள் தொடர் ஆலோசனைக் கூட்டங்களில் ஈடுபட்டுவந்தனர். குறிப்பாக, கொரோனாவைக் கையாண்டதில் முதலமைச்சர் ஆதித்யநாத்தின் மீது கட்சிக்குள்ளேயே அதிருப்தி ஏற்பட்டது. மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கௌசல் கிஷோர், லோகேந்திர சிங் ஆகியோரும் ஆதித்யநாத் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தினர். 


தேர்தலை எதிர்கொள்ள இந்தப் பிரச்னையைத் தீர்த்தாக வேண்டிய கட்டாயத்தில், பாஜகவின் துணைத்தலைவர் இராதா மோகன் சிங்கும் கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் பிஎல் சந்தோசும் அடுத்தடுத்து லக்னோவுக்குச் சென்று மாநில அமைச்சர்கள் 15 பேருடன் தனித்தனியாக சந்தித்துப் பேசினார்கள். துணைமுதலமைச்சர்கள் கேசவ் மௌர்யாவும் தினேஷ் சர்மாவும் அதில் அடக்கம். 




அனைவரும் கூறியதில் பொதுவான அம்சம், அரசாங்கத்துக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே பெரிய இடைவெளி இருக்கிறது என்பதுதான்! குறிப்பாக, சட்டமன்ற உறுப்பினர்கள் சொல்வதற்கு முதலமைச்சரோ அதிகாரிகளோ மதிப்பு தருவதில்லை என்பது முக்கியமான புகார். ஆனாலும் கடந்த ஏப்ரல் மாதத்தை ஒப்பிட கொரோனா பணிகளில் முன்னேற்றம் இருக்கிறது என்றும் அமைச்சர்கள் மேலிடப் பொறுப்பாளர்களிடம் கூறியுள்ளனர். சந்தோஷ் தன் லக்னோ பயணத்துக்குப் பின்னர் ஆதித்யநாத்தின் செயல்பாட்டைப் பாராட்டி டுவிட்டரில் பதிவிட்டார். இராதாமோகனும் தன் பங்குக்கு பாராட்டு தெரிவித்தார். 
அதையடுத்து என்ன நடக்குமோ என பரபரப்பாக இருந்தநிலையில், இப்போதைக்கு ஆதித்யநாத்தின் தலைப்பாகைக்கு ஆபத்து ஒன்றும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.


மேலும் படிக்க: Kushboo on Union Vs Centre : 'ஒன்றியம்’ இல்லை ‘பாரதப் பேரரசு’ - குஷ்பு விமர்சனம் கொடுத்த புதிய பெயர்!