நாட்டையே உலுக்கிய உன்னாவ் பலாத்கார சம்பவத்தில் கைதான குல்தீப் செங்காருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. அவருடைய மகளின் திருமணத்தில் பங்கேற்க தோதாக அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி 27 ஆம் தேதி முதல் பிப்ரவரி 10 ஆம் தேதி வரை அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. அந்த நாட்களில் அவர் அன்றாடம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். 2 பேர் சுமார் ரூ.1 லட்சம் மதிப்பில் ஜாமீன் அளிக்க வேண்டும் போன்ற உத்தரவுகளை பிறப்பித்துள்ளது நீதிமன்றம். குடும்பத்தின் ஒரே ஆண் செங்கார் என்பதால் திருமண வேலைகளை கவனிக்கும் நிமித்தம் அவருக்கு இந்த இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டது. அதன்படி இந்த ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.


நாட்டையே உலுக்கிய உன்னாவ் சம்பவம்:


உத்தரப் பிரதேச மாநிலம் பங்கார்மாவு தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார். கடந்த 2017-ம் ஆண்டு உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக, குல்தீப் சிங் செங்கார் மீது பாதிக்கப்பட்ட சிறுமி புகார் செய்தார்.


உன்னாவ் சிறுமி பலாத்காரம் நாடு முழுவதும் பெரிய விவாதப் பொருளானது. எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்புகளை வெளிப்படுத்தின. எம்எல்ஏ செங்கார் கைது செய்யப்பட்டார். அவரைக் கட்சியில் இருந்தும் பாஜக தலைமை நீக்கியது. குல்தீப் சிங் செங்கார் மீது போக்ஸோ சட்டம், பலாத்காரம், ஆட்கடத்தல், மிரட்டல், வன்புணர்வு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டது. விசாரணை முடிந்த நிலையில் டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் குல்தீப் செங்காரை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.


தீர்ப்பில் " குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள குல்தீப் செங்கார் தனது வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.25 லட்சத்தை ஒரு மாதத்துக்குள் வழங்கிட வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய்க்கு கூடுதலாக ரூ.10 லட்சம் இழப்பீடாக குல்தீப் செங்கார் வழங்கிட வேண்டும்.


பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாருக்கு உரிய பாதுகாப்பை வழங்கி, ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒருமுறையும் சிபிஐ அவர்களின் பாதுகாப்பை ஆய்வு செய்யவேண்டும். மேலும், தற்போது டெல்லி மகளிர் ஆணையத்தின் சார்பில் வழங்கப்பட்ட வாடகை வீட்டில் பாதிக்கப்பட்ட சிறுமியும், குடும்பத்தாரும் வசிக்கிறார்கள். அவர்கள் அடுத்த ஓர் ஆண்டுக்கு அந்தவீட்டில் குடியிருக்கவும், அதற்கான வாடகை மாதம் ரூ.15 ஆயிரத்தை உ.பி. அரசு வழங்கிட வேண்டும்.


குல்தீப் செங்கார் பொதுமக்களுக்கு சேவையாற்றும் பணியில் இருக்கிறார், ஆனால், இதுபோன்ற தவற்றைச் செய்து மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார். அரசியலில் சக்தி வாய்ந்தவராக கருதப்படும் குல்தீப் செங்காருக்கு எதிராக பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்கு மூலம் உண்மையாகவும், அப்பழுக்கற்றதாகவும் இருந்தது.


இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றொருவருமான சசி சிங்கிற்கு எதிராக சிபிஐ ஆதாரங்களை நிரூபிக்காததால், அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால், பாதிக்கப்பட்ட சிறுமி மைனர் என்பதை சிபிஐ நிரூபித்துள்ளதால், போக்ஸோ சட்டப்படி விசாரிக்கப்பட்டது" என தீர்ப்பளித்தார்.


இந்த சம்பவம் கடந்த 2017-ம் ஆண்டு நடந்ததால், திருத்தப்பட்ட போக்ஸோ சட்டத்தின் கீழ் மரண தண்டனை அளிக்கும் பிரிவை குல்தீப் சிங்கிற்கு விதிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, எம்எல்ஏ பதவியும் பறிபோனது.