சமீப காலமாக, கொடூரமான கொலை சம்பவங்கள் தொடர் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. டெல்லியில் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பெண்ணை அவரது காதலனே கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி எறிந்த சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, இதேபோன்ற பல கொலை சம்பவங்கள் பல்வேறு மாநிலங்களில் அரங்கேறியது. அதன் தொடர்ச்சியாக, டெல்லியில் 21 வயது இளைஞரை இரண்டு பேர் கொலை செய்து, அவரது தலையை துண்டித்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலையை துண்டித்தது மட்டும் இன்றி அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவை பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதி ஒருவருக்கு அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், கொலை செய்தவர்கள் தீவிரவாதிகளாக இருப்பார்களோ என சந்தேகிக்கப்படுகின்றனர்.
இதையடுத்து, அவர்கள் இருவரையும் காவல்துறை கைது செய்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் உதம் சிங் நகரில் வசிக்கும் ஜக்ஜித் சிங் என்ற ஜக்கா (29), டெல்லியில் உள்ள ஜஹாங்கிர்புரியில் வசிக்கும் நௌஷாத் (56) ஆகியோர் பயங்கரவாதகளுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் வலதுசாரி தலைவர்களை படுகொலை செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் கூறி டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டனர்.
சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கூடுதல் போலீஸ் கமிஷனர் (சிறப்பு பிரிவு) பிரமோத் சிங் குஷ்வாஹா, "இருவரையும் கைது செய்த பிறகு, ஜஹாங்கிர்புரியில் வாடகைக்கு அவர்கள் தங்கியிருந்த வீட்டில் ரத்த தடயங்களை போலீசார் கண்டுபிடித்தனர்.
மேலும், விசாரணையில் பால்ஸ்வா பால் பண்ணை பகுதியில் உள்ள வாய்க்காலில் இருந்து தலை துண்டிக்கப்பட்ட உடல் கண்டுபிடிக்கப்பட்டது. 21 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பாகிஸ்தான் பயங்கரவாதி சோஹைல்தான் அவர்கள் இருவரையும் கையாண்டு வந்துள்ளார். தங்களின் திறமைகளை நிரூபிக்கும்படி சோஹைல் கேட்ட பிறகு நௌஷாத் மற்றும் ஜக்ஜித் சிங் அந்த இளைஞனை குறிவைத்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட இருவரும் டிசம்பர் 15 ஆம் தேதி பாதிக்கப்பட்டவரை மது வாங்கி தருவதாகக் கூறி ஏமாற்றி அழைத்துச் சென்றனர். அவர்கள் அவரை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று, அவரைக் கொன்று, அந்தச் செயலை படம்பிடித்தனர். அதை அவர்கள் சோஹைலுக்கு அனுப்பியுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் இறந்தவரின் உடலை துண்டு துண்டாக வெட்டினர். அதை அவர்கள் பிளாஸ்டிக் பைகளில் அடைத்து நீர்நிலைகளில் அப்புறப்படுத்துவதற்கு முன்பு சில நாட்கள் தங்கள் வீட்டில் பதுக்கி வைத்தனர். இதுவரை, ஆறு உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் ஆதாரங்களை சேகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான ஹர்கத்-உல்-அன்சாருடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் ஜக்ஜித் சிங் மற்றும் நௌஷாத் ஆகியோரைக் கைது செய்ய டெல்லி காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.