பெண் மீது வேகமாக சென்ற எஸ்யூவி கார் மோதியதில் பயங்கர விபத்து நடந்துள்ளது. தனது வீட்டிற்கு அருகே தெரு நாய் ஒன்றுக்கு அந்த பெண் உணவு அளித்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.


சமீபத்தில், டெல்லியில் நடந்த பயங்கர விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. சுல்தான்புரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, இளம் பெண் ஓட்டி சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது சிலர் காரை கொண்டு மோதி உள்ளனர். 


அந்த பெண் காரின் அடியில் சிக்கிய நிலையில், கிட்டத்தட்ட 13 கீமீ தூரத்திற்கு அவர் இழுத்து செல்லப்பட்டார். உடலில் ஆடை இன்றி பல காயங்களுடன் அந்த பெண் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். 


இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சண்டிகரில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இளம்பெண் மீது வேகமாக சென்ற எஸ்யூவி கார் மோதியதில் பயங்கர விபத்து நடந்துள்ளது. தனது வீட்டிற்கு அருகே தெரு நாய் ஒன்றுக்கு அந்த பெண் உணவு அளித்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.


இந்த விபத்து சிசிடிவியில் பதிவாகியுள்ளது. தேஜஸ்விதா என்ற அந்த பெண்ணின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காயம் அடைந்த பெண் தங்களிடம் பேசியதாகவும், தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


விபத்து குறித்து விவரித்த பெண்ணின் குடும்பத்தினர், "சனிக்கிழமை இரவு தேஜஸ்விதாவும் அவரது தாயார் மஞ்சிதர் கவுரும் தெருநாய்களுக்கு நடைபாதையில் உணவளித்துக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது" என்றனர்.


வெளியான அந்த சிசிடிவியில், நாய்க்கு தேஜஸ்விதா உணவளித்து கொண்டிருப்பதை காணலாம். இதையடுத்து, மஹிந்திரா தார் எஸ்யூவி கார், அந்த பாதையில் சென்றுள்ளது. திடீரென அந்த கார் யூடர்ன் அடித்துள்ளது. அப்போதுதான், பெண் மீது கார் மோதியுள்ளது. இதில், வலி தாங்காமல் அவர் துடிப்பதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.


தேஜஸ்விதா ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அவரது தாயார் அதிர்ச்சியடைந்தார். உதவிக்கு யாரும் வரவில்லை என்றும் வீட்டுக்கும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் உடனே போன் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.


இதுகுறித்து தேஜஸ்விதாவின் தந்தை ஓஜஸ்வி கௌஷல் பேசுகையில், "கட்டிடக்கலையில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு சிவில் சர்வீஸ் நுழைவுத் தேர்வுக்கு அவர் தயாராகி வருகிறார். தெருநாய்களுக்கு உணவளிக்க தினமும் அவர் தன் தாயுடன் செல்வது வழக்கம்" என்றார்.






போலீசார் வழக்கு பதிவு செய்து வாகனம் மற்றும் டிரைவரை தேடி வருகின்றனர்.