இனி, திருமணம் ஆகாத தம்பதிகள், ஓயோ (OYO) அறைகளில் தங்க முடியாத அளவுக்கு விதிகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த புதிய விதி, உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த விதி, இந்தாண்டு அமலுக்கு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓயோ அறைகளை சிலர் தவறான முறைகளில் பயன்படுத்துவதாக தொடர் புகார் வந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, திருமணம் ஆகாத 18 வயதுக்கு உட்பட்ட தம்பதிகள், ஓயோ அறைகளுக்கு சென்று, தவறாக பயன்படுத்துவது கலாசார சீர்கேடு என சிலர் விமர்சித்து வந்தனர்.
கல்யாணம் ஆகாத தம்பதிகளுக்கு அதிர்ச்சி:
இந்த நிலையில், ஓயோ விதிகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருமணம் ஆகாத தம்பதிகள், இனி செக் இன் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என புதிய விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஓயோவில் ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்கள் உட்பட அனைத்து ஜோடிகளும் செக்-இன் செய்யும்போது, தங்கள் உறவின் ஆதாரத்தை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய ஓயோ விதிகள் வாடிக்கையாளர்களின் கருத்துகளின் அடிப்படையில் முதலில் உத்தரபிரதேசத்தின் மீரட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விதியை உடனடியாக அமல்படுத்துமாறு நகரத்தில் உள்ள தங்களின் ஹோட்டல்களுக்கு ஓயோ ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது.
விதிகளில் மாற்றம் கொண்டு வந்த OYO:
வாடிக்கையாளர்களின் இருந்து பெறப்படும் கருத்துக்களைப் பொறுத்து, ஓயோ நிறுவனம், மற்ற நகரங்களுக்கும் இந்த விதியை விரிவுபடுத்த உள்ளது. கடந்த காலங்களில், குறிப்பாக மீரட்டில் உள்ள சில அமைப்புகள், OYO நிறுவனத்திற்கு இதுதொடர்பாக கோரிக்கை முன்வைத்தது.
கூடுதலாக, திருமணமாகாத தம்பதிகள் ஓயோ ஹோட்டல்களுக்குச் செல்வதைத் தடுக்க வேண்டும் என பல்வேறு நகரங்களில் இந்து அமைப்புகள் தொடர் கோரிக்கை வைத்து வருகிறது.
ஓயோ கொண்டு வந்துள்ள புதிய விதிகளுக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. வயது வந்த திருமணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவது தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவது போன்றது என மனித உரிமை ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: BNS different from IPC: புதிய குற்றவியல் சட்டம் Vs இந்திய தண்டனை சட்டம் - அறிய வேண்டிய முக்கிய விதிகள்