குஜராத்தில் இந்திய கடலோர காவல் படையின் ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த மூவர் உயிரிழந்தனர்.
சமீப காலமாக, தொடர் விமான விபத்துகள் நடந்து வருவது தொடர் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அஜர்பைஜான், தென்கொரியா என அடுத்தடுத்து நடந்த விபத்துகள் சர்வதேச அளவில் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தின.
ஹெலிகாப்டர் விபத்து:
அதன் தொடர்ச்சியாக, குஜராத்தில் ஹெலிகாப்டர் விபத்து நடந்துள்ளது. இந்திய கடலோர காவல்படையின் மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் (ALH) போர்பந்தரில் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.
ஆயுதப்படைகளால் இயக்கப்படும் துருவ் என்ற ஹெலிகாப்டர்தான் விபத்தில் சிக்கி இருக்கிறது. திறந்தவெளியில் ஹெலிகாப்டர் விழுந்து தீப்பிடித்து எரியும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. விபத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இதுதொடர்பான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
வழக்கமான பயிற்சியின்போது துருவ் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இந்திய கடலோர காவல்படையின் ஏர் என்கிளேவ் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. இறந்தவர்களை தவிர, சிலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியானவர்களின் அடையாளம் இன்னும் தெரியவில்லை.
குஜராத்தில் திக் திக் நிமிடங்கள்:
இந்திய கடலோர காவல்படை என்பது கடல்சார் காவல் படையாகும். தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் பிராந்திய கடற்பகுதியில் தனது அதிகார வரம்பைக் கொண்டுள்ளது.
நான்கு மாதங்களுக்கு முன்பு செப்டம்பரில், இலகுரக ஹெலிகாப்டர் ஒன்று போர்பந்தருக்கு அருகே அரபிக்கடலில் விழுந்ததில் மூன்று விமானிகள் காணாமல் போயினர். இரண்டு பணியாளர்களின் உடல்கள் பின்னர் மீட்கப்பட்ட நிலையில், பைலட் ராகேஷ் குமார் ராணாவைக் கண்டுபிடிக்கும் பணி தொடர்ந்தது.
ஒரு மாத கால தேடலுக்குப் பிறகு, அக்டோபரில் குஜராத் கடற்கரையில் கடலோர காவல்படையினரால் விமானியின் உடல் மீட்கப்பட்டது.
இதையும் படிக்க: BNS different from IPC: புதிய குற்றவியல் சட்டம் Vs இந்திய தண்டனை சட்டம் - அறிய வேண்டிய முக்கிய விதிகள்