ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் தேதி மாற்றப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அக்டோபர் 5ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் தேதியை மாற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: ஆனால், ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் திட்டமிட்டப்படி நடத்தப்பட உள்ளது. இருப்பினும், ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் தேதியும் மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில், அக்டோபர் 8ஆம் தேதி, இரண்டு மாநில தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது.
முன்னதாக, ஜம்மு காஷ்மீர், ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள், அக்டோபர் 4ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. பிஷ்னோய் சமூக மக்களின் கோரிக்கையை ஏற்று தேர்தல் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம்: பிஷ்னோய் சமூகத்தின் குருவாக கருதப்படும் ஜம்பேஷ்வரின் நினைவாக அசோஜ் அமாவாசை விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவில் பங்கேற்பது பிஷ்னோய் சமூக மக்களின் பாரம்பரியமாக இருந்து வருகிறது. பல நூற்றாண்டுகளாக இந்த பழக்க வழக்கம் இருந்து வருகிறது.
பிஷ்னோய் சமூக மக்களின் ஜனநாயக உரிமை மற்றும் பாரம்பரியம் ஆகிய இரண்டையும் மதிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: "மாட்டுக்கறி வச்சிருக்கியா" முஸ்லிம் முதியவரை சரமாரியாக தாக்கிய சக பயணிகள்.. ரயிலில் பரபரப்பு!