குஜராத் மாநிலத்தில் மனநல பாதிக்கப்பட்ட தாயின் கழுத்தை நெரித்து அவரது மகனே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்தது மட்டும் இன்றி தாயின் சடலத்தோடு போட்டோ எடுத்து இன்ஸ்டாவில் ஸ்டேட்டஸ் வைத்த கொடூரமும் அரங்கேறியுள்ளது.
நடுங்க வைக்கும் சம்பவம்: பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு, ஷ்ரத்தா கொலை சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தாண்டு, கொல்கத்தா மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ராஜ்கோட்டில் மனநல பாதிக்கப்பட்ட தாயை அவரது மகனே கொலை செய்துவிட்டு அவரது சடலத்தோடு போட்டோ எடுத்து இன்ஸ்டாவில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து உள்ளூர்வாசி ஒருவர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் சென்றுள்ளனர். அங்கு, குற்றவாளியான நிலேஷ் கோசாய் தனது தாயின் உடலுக்கு அருகில் அமர்ந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தாயை கொன்ற மகன்: 48 வயதான ஜோதிபென் கோசாய் கொல்லப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. விசாரணையின் போது, கொலை செய்ததை நிலேஷ் ஒப்புக்கொண்டார். முதலில் தனது தாயை கத்தியால் தாக்க முயன்றுள்ளார். ஆனால், அதிலிருந்து ஜோதிபென் தப்பியுள்ளார். பின்னர், போர்வையால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் நிலேஷ் .
கொலை செய்த பிறகு, தனது தாயின் சடலத்தோடு எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். "மன்னிக்கவும் அம்மா, நான் உன்னைக் கொன்றுவிட்டேன். நான் உன்னை இழந்துவிட்டேன். ஓம் சாந்தி " என்ற கேப்ஷனுடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், "நான் என் அம்மாவைக் கொலை செய்துவிட்டேன். என் உயிரை இழந்துவிட்டேன். மன்னிக்கவும் அம்மா, ஓம் சாந்தி, மிஸ் யூ அம்மா" என பதிவிட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், ஜோதிபென் பல ஆண்டுகளாக கடுமையான மனநோயால் அவதிப்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. மகனுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், இருவருக்கும் அடிக்கடி சண்டை நடந்துள்ளது. சம்பவத்தன்று நிலேஷ் மற்றும் ஜோதிபென் இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது.